Also Watch
Read this
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி ரஜினி , கமல், அஜித், சூர்யா, ஜோதிகா, தனுஷ், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளனர். வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே நடிகர் அஜித் தனது வாக்கினை செலுத்தி உள்ள நிலையில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் அது நம் கடமை எனவும் சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு
2026ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் திருவிழா காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்தவரிசையில் சினிமா பிரபலங்களும் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

அதிகாலையிலேயே அஜித்
திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித், கார் ரேஸ் மற்றும் ஷூட்டிங் பணிகளுக்காக கடந்த சில நாட்களாக பெல்ஜியத்தில் இருந்த நிலையில் வாக்குப்பதிவு செய்வதற்காகவே அங்கிருந்து துபாய் வழியாக சென்னை வந்தடைந்தார். ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் விமான நிலையத்திலிருந்து நேரடியாக திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு காலை 6.40 மணிக்கே சென்று காத்திருந்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்களின் கூட்டத்தைத் தவிர்க்கவும் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே வந்து அவர் அமைதியாக காத்திருந்த தகவல் அங்குள்ள மக்கள் மத்தியில் பரவ ரசிகர்கள் கூட்டம் வாக்குப்பதிவு மையத்திற்கு முன்பு திரள ஆரம்பித்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்களும் திணற ஆரம்பித்தனர்.

முதல் நபராக வாக்குப்பதிவு
நிலைமையை சமாளிக்க வேண்டும் என முடிவெடுத்த தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சிலநிமிடங்களுக்கு முன்னதாகவே அஜித்தை மையத்திற்குள் அனுமதித்து முதல் ஆளாக வாக்குப்பதிவு செய்ய வைத்தனர். எந்த ஸ்பெஷல் அனுமதியும் எதிர்பார்க்காமல் வரிசையில் நின்று வாக்களிக்க விரும்பும் நபர்தான் அஜித் என்றாலும், ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் தேர்தல் அலுவலர்கள் அவருக்கு இந்த சிறப்பு சலுகையை வழங்கும் நிலை ஏற்பட்டது. ஜனநாயக கடமையை ஆற்றியதும் தனது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தைக் காண்பித்த அஜித், செய்தியாளர்களுக்கு சிறு புன்னகையை மட்டும் காட்டிவிட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பெல்ஜியத்திலிருந்து கிளம்பி ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்து முதல் ஆளாக வாக்களித்தது பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் இருந்தது.

ரஜினிகாந்த் வாக்குப்பதிவு
தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது இளைய மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பின்னர் விரலில் வைக்கப்பட்ட மையை காட்டி சிரித்தபடியே வாக்குப்பதிவு மையத்தை விட்டு ரஜினி வெளியே வர, தலைவா தலைவா என ரசிகர்கள் உற்சாக மிகுதியில் சத்தம்போட்டனர். இதனை தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் சில வார்த்தைகள் பேசிய அவர், வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ரஜினிகாந்த் வாக்களித்த அதே வாக்குச்சாவடியிலேயே நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்த நிலையில் நடிகர் ஜீவா 2 மணிநேரமாக காத்திருந்து தி.நகர் ஹிந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர், வாக்களிப்பது நம் கடமை எனவும் இளைஞர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

குடும்பத்தினருடன் சிவகுமார்
ஹிந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியிலேயே நடிகர் சிவக்குமார் தனது மனைவி, மகள் ஆகியோருடன் வரிசையில் நின்று வாக்களித்த நிலையில் மகன் சூர்யாவும் தனது மனைவி ஜோதிகாவுடன் வாக்களித்தார். அதேபோல், கார்த்தி, பிரபு, டி.ராஜேந்தர், சிம்பு ஆகியோரும் ஹிந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

சிம்பு கலகலப்பு
வாக்களித்தபின்பு செய்தியாளர்களை சந்தித்த சிம்புவிடம், அவரது தந்தை டி.ராஜேந்தர் முன்னதாக வாக்குச்சாவடியில் சீனியர் சிட்டிசன்களுக்கு என்ன மரியாதை? அனைவரும் ஒரே கியூவில் நிற்க வேண்டுமா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அவர் டிஆர். நான் எஸ்டிஆர் அவர்வேறு, நான்வேறு என்னை விட்டுவிடுங்கள் எனக்கூறினார் சிம்பு.

கீர்த்தி சுரேஷ் உடன் செல்பி
சென்னை ஈசிஆர் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் சங்கர் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த நிலையில் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடிகை கீர்த்தி சுரேசும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அப்போது, வாக்குமையத்தில் இருந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

சிவகார்த்திகேயன் வாக்குப்பதிவு
வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்குப்பதிவு செய்த சிவகார்த்திகேயன், சோஷியல் மீடியா ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த தேர்தல் தனக்கும் ஆர்வமாகவே உள்ளதாகவும், பணத்துக்காக ஓட்டை விற்றுவிட்டால் யாரையும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது எனவும் தெரிவித்தார்.

கமல், திரிஷா வாக்குப்பதிவு
ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடி மையத்தில் கமல்ஹாசன், அவரது மகள் ஸ்ருதிஹாசன், தனுஷ், அர்ஜூன், இயக்குநர் மிஷ்கின், ஜெயம் ரவி ஆகியோர் வாக்குப்பதிவு செய்த நிலையில் நடிகை த்ரிஷாவும் தனது தாயுடன் அந்த வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார். தனது கை விரலில் வைக்கப்பட்ட மையை காட்டி புன்னகையுடன் போஸ் கொடுத்த த்ரிஷாவிடம், இந்த தேர்தலில் மாற்றம் நிகழுமா? என செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவர் காரில் கிளம்பி சென்றார்.

திரை பிரபலங்கள் ஆர்வம்
நடிகை குஷ்பூ தனது கணவர் சுந்தர்.சியுடன் சேர்ந்து மந்தைவெளியில் உள்ள வாக்குச்சவாடி மையத்தில் தனது வாக்கை செலுத்திய நிலையில் கீழ்ப்பாக்கம் வாக்குச்சாவடியில் விஜய் சேதுபதி, திருவல்லிக்கேணியில் சத்யராஜ், வளசரவாக்கத்தில் யோகிபாபு, மேடவாக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், நந்தனத்தில் விடிவி கணேஷ், சாலிகிராமத்தில் விஜய் ஆண்டனி மற்றும் பரத், அண்ணா நகரில் விஷால், ஆயிரம் விளக்கில் ஜிவி பிரகாஷ், இயக்குநர் அட்லி, நடிகர் துருவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

வடிவேலு வாக்குப்பதிவு
சாலிகிராமம் வாக்குச்சாவடியில் தனது வாக்கைப்பதிவு செய்த காமெடி நடிகர் வடிவேலு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள சின்னங்களையும், பொத்தானையும் சிலநிமிடங்கள் உற்று உற்று பார்த்தார். அதன் பிறகு மை வைக்கப்பட்டதும் தனது ஆட்காட்டி விரலை கற்பூரம் காட்டுவதுபோல சுற்றி காண்பித்துவிட்டு வெளியே வந்தார். பின்னர் ஒரு முதியவரின் காதில் ஏதோ ரகசியம் பேசிய அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். காலை முதலே தங்களின் வருகைக்காக காத்திருப்பதாக ஒரு செய்தியாளர்கூற, இதெல்லாம் பெரிய பிட்டு என கிண்டலடித்தார். தொடர்ந்து 12 வயது மற்றும் 16 வயது சிறுவர்கள்கூட கத்துவார்கள், இவ்வளவு ஏன் எனது பேரன்கூட கத்துவான் அதையெல்லாம் அரசியல் புரிதலாக எடுத்துக்கொள்ள முடியுமா? எனக்கூறிய வடிவேலு, வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்து வித்தியாச சைகை காட்டினார். அந்த சைகை உதயசூரியன்தான் உதிக்கும் என்று சொல்லாமல் சொல்வதுபோல இருந்தது. அதேபோல், எனக்கு என்ன கண்ணா கெட்டுப் போய்விட்டது, பார்த்து வாக்கு செலுத்த வேண்டும் என்பதற்காகதான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உற்று நோக்கியதாகவும் 3சி பற்றி தெரியவே தெரியாது எனவும் கூறிய அவர், நம் ஓட்டு வேறு யாராவது செலுத்துகிறார்களா? என்பதை பார்க்கவே வெளிநாட்டில் இருந்து வந்து பலர் ஓட்டு செலுத்தி உள்ளதாகவும் கூறினார்

மே 4ல் தெரிய வரும்...
வழக்கமாக அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுகவினர்தான் மெஜாரிட்டி வாக்குகளை அள்ளுவார்கள் என்ற நிலையில் தற்போது களத்தில் நடிகர் விஜய்யின் தவெகவும் பிரசண்ட் ஆகி உள்ளதால் 2026 தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர்கள் பட்டாளமும் அவரவர் வாக்குச்சாவடியில் ஆர்வமுடன் வந்து வாக்களித்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஏற்கெனவே உள்ள கட்சிகளுக்கே ஆதரவு கொடுத்துள்ளார்களா? அல்லது திரைத்துறையில் உள்ள விஜய்க்கே வாக்குகளை பதிவு செய்துள்ளார்களா என்பது மே 4 அன்று தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved