Also Watch
Read this
By: Web Team

இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்று, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை ரத்து செய்ய மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி, இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, இபிஎஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார்.
விசாரணையின் போது, இபிஎஸ் தரப்பில் கூறியதாவது;
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டார்.
இவ்வாறு இபிஎஸ் தரப்பு வாதிட்டது.
சூர்ய மூர்த்தி தரப்பில் கூறியதாவது;
கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி, கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது.
இவ்வாறு சூர்யமூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று தீர்ப்பளித்தார். இபிஎஸ் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் பாருங்கள்: இபிஎஸ் வழக்கில் திடீர் திருப்பம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved