Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரையில் மகளிர் சுய உதவிக்குழு கடன் என்ற பெயரில், தங்களது பெயர்களில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், அப்பகுதியில் உள்ள 'தடாதகை மீனாட்சி', 'சக்தி சாய்', 'மீனாட்சி சுந்தரம்', 'அந்தி வானம்' உள்ளிட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டங்களை மகளிர் குழு சமுதாய அமைப்பாளர் (Community Organizer) முத்துலெட்சுமி மற்றும் சமூக வளப் பயிற்றுநர்களான காளீஸ்வரி, பிரியா, சண்முகவள்ளி ஆகியோர் ஒருங்கிணைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அரசின் மானியத்துடன் கூடிய வங்கி கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, உறுப்பினர்களிடம் இருந்து ஆதார் மற்றும் வங்கி ஆவணங்கள் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது :
"எங்களிடம் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை லோன் தருவதாகக் கூறிவிட்டு, 1 லட்சம் ரூபாய் மட்டுமே லோன் ஆகியுள்ளது என்றார்கள். அதிலும் கமிஷனாக 25 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு, எங்களிடம் வெறும் 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்தனர்.
இதற்கான வாரத் தவணையாக 6 ஆயிரம் ரூபாயை எங்களிடம் சீட்டுப் புத்தகம் மூலமாக முறையாகப் பெற்றும் வந்தனர். ஆனால், தற்பொழுது வங்கியில் சென்று கேட்டால், எங்கள் பெயரில் 80 லட்சம் ரூபாய் முதல் கோடிக்கணக்கான ரூபாய் வரை கடன் நிலுவையில் இருப்பதாக வங்கித் தரப்பில் கூறி அதிர்ச்சியளிக்கிறார்கள்.
எங்கள் ஆவணங்களையும், ஏடிஎம் கார்டுகளையும் அவர்களே வைத்துள்ளதால், பிள்ளைகளின் ஸ்காலர்ஷிப் மற்றும் அரசின் மானியத் தொகையைப் பெற முடியாமல் தவித்து வருகிறோம். தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் நாங்கள், எங்களது கடின உழைப்பிற்கான ஊதியத்தைக் கூட வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கியில் கேட்டால் எங்களை 'தற்குறிகள்' எனப் பேசி அதிகாரிகள் ஏளனம் செய்கிறார்கள்." முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு
அலுவலகத்தில் புகாரளிக்கச் சென்ற நிலையில், அங்கிருந்து அவர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பெண்கள் திரண்டு சென்று மாநகர காவல் ஆணையரிடம் தங்களுக்கு நீதி கோரி புகார் மனுவை அளித்துள்ளனர்.
மறுபுறம், இந்த மோசடிப் புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள சமுதாய அமைப்பாளர் முத்துலெட்சுமி தரப்பினர், தம்மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளனர். "வங்கி கடன் வழங்குவதற்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே தங்களுக்கு உள்ளது. கடன் வாங்கிய நபர்கள், தாங்கள் வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் திசை திருப்புவதற்காகவே இது போன்ற வீண் பழிகளைச் சுமத்துகிறார்கள்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் நேரில் சென்று தாங்கள் விளக்கமளித்துள்ளதாகவும், சமூக வளப் பயிற்றுநர்கள் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும்
அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏழை எளிய பெண்களை இலக்காகக் கொண்டு, மகளிர் குழுக்களின் பெயரில் இத்தகைய பெரும் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மதுரை மாநகர காவல்துறை
தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.