Also Watch
Read this
பெரம்பூர் எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன் வழங்கினர்.
2 தொகுதிகளில் போட்டி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தவெக தலைவர் விஜய். இந்த சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை விஜய் ராஜினாமா செய்தார்.
அரசு வெளியிட்ட தகவல்
இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;
தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பதற்கு முன்பாக திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர், சட்டப்பேரவை முதன்மை செயலாளர் கி.சீனிவாசனிடம் வழங்கினார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி
தவெக தலைவர் விஜய், சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலுமே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
* பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி - 1,19,454 வாக்குகள் - 53,532 வாக்குகள் வித்தியாசம்
* திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி - 91,381 வாக்குகள் - 27,416 வாக்குகள் வித்தியாசம்
விஜய் பதவி ஏற்பு
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

திருச்சி கிழக்கில் யார்?
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ள நிலையில், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் யார் போட்டியிடுவார், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.