Also Watch
Read this
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியை பிடிக்கும் ஆசையோடு காத்திருந்த அதிமுக, மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொடர் தோல்வி என விமர்சனங்களை தாங்கி நின்ற அதிமுகவுக்கு 2026 தேர்தலும் சோபிக்காமல் போயிருக்கும் நிலையில், தோல்விக்கு என்ன காரணம்?

தொடர் தோல்வியில் அதிமுக
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகள் வழிநடத்திய அதிமுக, அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது இது தான் முதன்முறை. 2021 தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அதிமுகவுக்கு, தற்போது அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போயிருக்கிறது. அதிமுக தொடங்கிய பிறகு சந்தித்த முதல் தேர்தலான 1977 மற்றும் 1980, 1985 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுக, 1989ஆம் ஆண்டு தோல்வி அடைந்தது. ஆனால், அடுத்த தேர்தலிலேயே அதாவது 1991 தேர்தலிலேயே மீண்டு வந்து வெற்றி பெற்றது. பின்னர் மீண்டும் 1996 தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுக, 2001ல் வெற்றி பெற்றது. 2006 தேர்தலில் தோல்வி அடைந்த அதிமுக, 2011, 2016 தேர்தல்களில் அடுத்தடுத்து ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 2016ல் பெற்ற வெற்றிக்கு பிறகு, அதிமுகவுக்கு தொடர் தோல்விகளே கிடைத்து வருகிறது.

மூன்றாவது இடத்தில்...
தற்போது, 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலைமை அதிமுகவுக்கு உருவாகியிருக்கிறது. கடந்த தேர்தலில் ஒரு கோடியே 53 லட்சத்து 91 ஆயிரத்து 55 வாக்குகள் பெற்ற அதிமுகவின் வாக்குகள் இந்த தேர்தலில் ஒரு கோடியாக சுருங்கியிருக்கிறது. சுமார் 49 லட்சம் வாக்குகளை அதிமுக இழந்திருக்கிறது. வடக்கு மண்டலம் மட்டுமே அதிமுகவுக்கு கை கொடுத்திருக்கிறது. தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்த கட்சி என்ற பெருமை இருந்தும், விஜய் ஆதரவு அலையில் சிக்கி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மதுரையில் தவெக கொடி
ஒரு காலத்தில் அதிமுகவின் கோட்டையாக இருந்த மதுரையில் வாஷ் அவுட் ஆகியிருக்கிறது. மதுரையில் மொத்தம் 10 தொகுதிகள் இருக்கும் நிலையில், கடந்த தேர்தலில் அதிமுக, திமுக தலா 5 இடங்களில் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன. ஆனால், 2026 தேர்தலில் மேலூர், திருமங்கலத்தை தவிர மற்ற 8 தொகுதிகளையும் தமிழக வெற்றி கழகம் கைப்பற்றியுள்ளது. திருமங்கலத்தில் திமுகவும், மேலூரில் காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுகவின் பெருமளவிலான வாக்கு வங்கியை, சசிகலா - ராமதாஸ் கூட்டணி சிதைத்துள்ளது. இதனால் திருமங்கலம், மதுரை மேற்கு, மேலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தீப விவகாரத்தில் பெரும் கவனம் பெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி கூட தவெக வுக்கு தான் கிடைத்திருக்கிறது.

முன்னாள் அமைச்சர்கள் தோல்வி
ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், பெஞ்சமின், கோகுல இந்திரா, வளர்மதி, எம்.சி.சம்பத், தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி என முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வியை தழுவியிருக்கிறார்கள். அதே மாதிரி, கோவையில் கடந்த முறை 10 தொகுதிகளையும் கைப்பற்றிய அதிமுக, இந்த முறை தொண்டாமுத்தூர் தொகுதியை மட்டுமே தக்க வைத்திருக்கிறது. எஸ்.பி.வேலுமணியின் அசைக்க முடியாத அஸ்திரமாக இருந்த கோவை மாவட்டம் தற்போது கையை விட்டு சென்றிருக்கிறது. கோவையில் 6 தொகுதிகளை தவெக கைப்பற்றிய நிலையில், 3 தொகுதிகளை திமுக கைப்பற்றி வெறும் 1 தொகுதியை மட்டுமே அதிமுக தக்க வைத்திருக்கிறது.

மேற்கு மண்டலத்தில்...
மொத்தமாக மேற்கு மண்டலத்தில் 57 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதிமுகவை விட அதிகமாக 27 தொகுதிகளில் வெற்றி முத்திரையை பதித்திருக்கிறது தவெக. கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கைவசம் இருந்து வந்த நிலையில், அதனை தவெக உடைத்தெறிந்தது அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கட்சி தொடங்கிய விஜய், அரசியல் வழிகாட்டி என எம்.ஜி.ஆர்., ஐ கையிலெடுத்தார். அதே மாதிரி அதிமுகவை பொருட்டாக மதிக்காமல் இருந்தார் விஜய். தேர்தலுக்கு முன்பு கூட்டணி உறுதி ஆன போது கூட, பாஜக கூட்டணி மற்றும் பலர் என்றே அடையாளப்படுத்தி வந்தார். ஆனால், அதிமுக தரப்பில் விஜய் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் வைக்கப்படவே இல்லை. விஜய்க்கு அனுபவம் இல்லை எனக் கூறி அதிமுக நகர்ந்து சென்றது.

50 ஆண்டு கால அரசியல்...
இன்னொரு பக்கம் விஜய் உடன் கூட்டணியை விரும்பியும் விஜய்யை எதிர்க்காமலேயே அமைதி காத்தது அதிமுக தலைமை. ஒவ்வொரு முறையும் திமுகவை எதிர்க்க தன்னால் மட்டுமே முடியும் என விஜய் பேசும் போது, அதிமுக அமைதியாக இருந்ததே தற்போது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது. அதிமுகவின் அரசியலே திமுக எதிர்ப்பு தான். அந்த அரசியலேயே தவெக தலைவர் விஜய்யும் கையிலெடுக்கும் போது, சுதாரித்து திமுகவுக்கு எதிரான கட்சியாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ள அதிமுக தவறிவிட்டது. திமுக மீது அதிமுக முன்வைத்த விமர்சனங்களும், திமுகவுக்கு எதிராக அதிமுக முன்னெடுத்த பிரச்சாரமும் விஜய்க்கு சாதகமாக முடிந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், திமுகவுக்கு மாற்று அதிமுக என்ற 50 ஆண்டு கால அரசியலை, 2026 தேர்தல் முடித்து வைத்திருக்கிறது.

சூறாவளி போன்ற விஜய் அலை
கட்சியில் சீனியர் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த முரண்பாடு, தலைமை பொறுப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என நினைத்து சசிகலா, ஓ.பி.எஸ். உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்காமல் பிடிவாதம் பிடித்தது ஆகியவை எடப்பாடி பழனிசாமிக்கு மைனஸ் பாயிண்ட்டாக மாறியிருக்கிறது. பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது கோட்டையான ராயபுரத்திலேயே டெபாசிட் இழந்திருக்கிறார். ராயபுரம் தொகுதியில் சிறுபான்மை சமூகத்தினர் அதிகளவில் வசிக்கும் நிலையில், பாஜக உடனான கூட்டணியால் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே மாதிரியான சூழல் பல தொகுதிகளில் எதிரொலித்துள்ளது. குறிப்பிட்ட வாக்குகளை மட்டுமே விஜய் பிரிப்பார் என நினைத்திருந்த இரு திராவிட கழகங்களை, விஜய்யின் அலை சூறாவளி போல தாக்கியிருக்கிறது.

கவனிக்க வைத்த கொங்கு மண்டலம்
அதேபோல பாஜகவுடனான கூட்டணியும் அதிமுகவுக்கு கை கொடுக்காமல் போயிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் சாதி பார்த்து தான் வாக்கு செலுத்துவார்கள் என்று இருந்த டிரெண்ட் தற்போது தலைகீழாக மாறி சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த விஜய்க்கு வாக்கு அளித்து இருப்பது கவனிக்க வைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved