Also Watch
Read this
Posted on: Feb 17, 2026 09:42 AM
By: Manigandan Raja
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என, திமுகவுக்கு, காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வருவதும், காங்கிரஸ் - திமுக இடையேயான கூட்டணி உறவு மனஸ்தாபத்தின் உச்சத்தை எட்டியிருப்பதும், அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது. 1967ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக எழுச்சியடைந்து ஆட்சியை பிடித்ததில் இருந்து தான் காங்கிரஸின் வீழ்ச்சி தொடங்கியது என்ற நிலையில், அன்றில் இருந்து இன்று வரை கூட்டணிகளில் காங்கிரஸின் பலம் என்னவாக இருந்திருக்கிறது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
உரசல் உக்கிரமாகியிருக்கிறது
மாநில கட்சியான திமுகவுக்கும், தேசிய கட்சியான காங்கிரஸுக்கும் இடையே இருந்த அன்பும், நெருக்கமும், பிளவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் முதலில் பேச தொடங்கிய போது திமுக அமைதியாக இருந்தது. காங்கிரஸின் எம்.பி.க்கள் சிலர் மட்டும் ஆட்சியில் பங்கு என தொடர்ச்சியாக பேசி வர, அப்போதும் திமுக கடந்து தான் சென்றது. ஆனால், கிட்டத்தட்ட 6 மாதங்க ளுக்கு மேலாக ஆட்சியில் பங்கு என்ற ஒரே கோரிக்கை காங்கிரஸில் எழுந்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் மிக தீவிரமாகி, ராகுல்காந்தியவே திமுகவின் சமூக வலைதள வாசிகள் விமர்சிக்கும் நிலை ஏற்பட்டு உரசல் உக்கிரமாகியிருக்கிறது.
காங்கிரஸின் பலம் என்ன?
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்காரர்கள், தங்கள் துணை இல்லாமல் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது என பேசி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த சூழலில், இத்தனை ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அமைத்த வரலாறு என்ன? காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி தான் இதுவரை வெற்றி பெற்றிருக்கிறதா? தமிழ்நாட்டில் காங்கிரஸின் பலம் என்ன என்பது குறித்தும் விரிவாக அலச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், 1967ஆம் ஆண்டு காங்கிரஸை வீழ்த்தி தான் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியை பிடித்தது. அதற்கு பிறகு 50 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக - திமுக என இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்து வருகிறது.
1996ல் அதிமுக, காங். கூட்டணி
கடந்த 1996ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றது. அது தான், காங்கிரஸில் இருந்து ஜி.கே.மூப்பனார் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரஸ் உருவாக்கிய நேரமும் கூட. அந்த தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. ஒரு MLA சீட்டை கூட காங்கிரஸால் வெற்றி பெற முடியவில்லை. 2001 தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி நீடித்தது. அந்த தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதிமுகவும் திமுகவை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. 1996 காலக்கட்டத்தில் ஊழல் புகார்கள், கைது நடவடிக்கை என பலகட்ட சிக்கலில் சிக்கிய ஜெயலலிதா, 2001ல் மீண்டும் ஆட்சி அமைக்க முக்கிய காரணமே ஜெயலலிதாவின் கூட்டணி வியூகம் தான். ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததற்காக காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக் கட்சி தொடங்கிய ஜி.கே.மூப்பனார், ஜெயலலிதா கூட்டணியிலேயே இணைந்தார். 2 ஆக உடைந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் தனது தலைமையில் ஒன்றாக கூட்டணியில் ஐக்கியமாக்கினார் ஜெயலலிதா.
2006 சட்டமன்ற தேர்தல் - திமுக கூட்டணியில் காங்கிரஸ்
2006 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில், திமுக கூட்டணிக்கு வந்தது காங்கிரஸ். இந்த தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணி தான் திமுகவின் வெற்றிக்கு முழு காரணம் என சொல்லி விட முடியாது. ஏனென்றால், அப்போது அதிமுக மீது இருந்த அதிருப்தி எக்கச்சக்கம். டெஸ்மா என்ற பெயரில் போராட்டம் நடத்திய ஒன்னே முக்கால் லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்தார் ஜெயலலிதா. அதோடு, மதமாற்ற தடைச் சட்டம், கலைஞர் கருணாநிதி மீதான கைது நடவடிக்கை ஆகியவை ஜெயலலிதா ஆட்சி மீதான மக்களின் கோபத்தை பெருக்கியது. இந்த தேர்தலில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனாலும், ஜெயலலிதா மீதான அதிருப்தியில் தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி
2011 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இடம்பெற்றது. அந்த தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானதால், திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத சூழல் உருவானது. இடையில் 2014 மக்களவை தேர்தலில் திமுகவிடம் கோபித்துக் கொண்டு கூட்டணியில் இருந்து வெளியேறியது காங்கிரஸ். அந்த தேர்தலில் தனித்து நின்று பலத்தை காட்டும் என்று பார்த்தால் ஒரு இடத்தில் கூட காங்கிரஸால் கூட வெற்றி பெற முடியாமல் போனது. மத்தியில் பாஜகவும் ஆட்சியை பிடித்தது.
2016 தேர்தலில் மீண்டும் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறவு ஐக்கியமானது. ஆனால், அதிமுக 2ஆவது முறையாக ஆட்சி அமைத்தது. 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் ஜெயலலிதா செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள், அவருக்கு கை கொடுக்க 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 2021 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடித்தது என்றாலும் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் பாஜக எதிர்ப்பு தான் என சொல்லப்படுகிறது. 2019 தேர்தலில் இருந்தே திமுக கூட்டணிக்கு கிடைத்து வரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பாஜக எதிர்ப்பு தான். அதனாலேயே, பாஜக எதிர்ப்பை திமுக சமீப காலமாக கூர்மைப்படுத்தி பட்டை தீட்டி வருகிறது. மேலும், திமுகவுடன் விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் இணைந்ததால் கூட்டணி வலுவாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும்...
மொத்தமாக, காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கிறது என காங்கிரஸ்காரர்கள் வாய் பெருமைக்கு கூறிக் கொண்டாலும், கள நிலவரம் அப்படி இல்லை என்பதை தான் காட்டுகிறது. சில சமயங்களில் காங்கிரஸ் இடம்பெற்ற கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் கூட, அந்த வெற்றிக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்திருக்கின்றன என்பதும் தெரிகிறது. அதேபோல, இத்தனை ஆண்டுகளாக கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதமும் இருக்க இருக்க குறைந்து கொண்டே தான் வருகிறது.
செல்வாக்கு கை கொடுக்கவில்லை
தமிழ்நாட்டை பொருத்தவரையில் திமுக மீது அதிருப்தி என்றால் அதிமுகவுக்கு ஓட்டு விழும். அதிமுக மீது அதிருப்தி என்றால் திமுகவுக்கு ஓட்டு விழும். அதை தாண்டி காங்கிரஸ் இருந்தால் தான் வெற்றி. பாஜக இருந்தால் தான் வெற்றி என இரு தேசிய கட்சிகள் கிளைம் செய்து கொள்வது போல அரசியல் சூழலும், தேர்தல் களமும் இல்லை என்பதை தான் வரலாறும் நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தும் அளவுக்கு காங்கிரஸின் செல்வாக்கு கை கொடுக்கவில்லை என்ற சூழலில், எப்படி ஆட்சியில் பங்கு கொடுக்க முடியும் என்பது திமுகவினர் தரப்பு கேள்வியாக உள்ளது.
கூட்டணி தயவால் தான்...
ஆகையால், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என இவ்வளவு உரிமையாக போர்க்கொடி தூக்கும் அளவுக்கு, காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை உயர்த்தி வைத்திருக்கிறதா? வெற்றிக்கான முக்கிய காரணமாக இருந்திருக்கிறதா? என்று பார்த்தால் மிகப்பெரிய கேள்விக்குறி தான். தங்கள் பலத்தில் தான் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதாக காங்கிரஸ் கூறிக் கொண்டாலும், திராவிடக் கட்சிகளின் கூட்டணி தயவால் தான் இன்னும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அழியாமல் இருக்கிறது என்பது எதிர் தரப்பு வாதமாக உள்ளது. காங்கிரஸின் பலம் தான் கூட்டணிக்கு வெற்றி என நெஞ்சை நிமிர்த்தி சொல்ல, முதலில் காங்கிரஸ்காரர்கள் உழைக்க வேண்டும் என்பது தான் வாக்காளர்களின் கருத்தாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved