Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் இன்னும் வலியை உணரவில்லை என டிரம்ப் பேட்டி
ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் இன்னும் போதிய வலியை உணரவில்லை எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அது இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், முடிவெடுக்கும் நிலைக்கு தாம் மிக அருகில் உள்ளதாகவும், இதற்கான அனைத்து ஆயத்தங்களும் தங்களிடம் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
இந்திய வம்சாவளி தம்பதி குற்றவாளிகளாக அறிவிப்பு

கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் மோசடி செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இந்திய வம்சாவளி தம்பதியை குற்றவாளி என பிரிட்டன் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரிட்டனில் வசிக்கும் ஜோகேஷ் பண்டாரி, அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் கொரோனா காலகட்டத்தில் கையுறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கினர்.
பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுக் கொண்டு, உபகரணங்களை வழங்காமல் சுமார் 26 கோடி ரூபாய் வரை மோசடி செய்தனர். இது தொடர்பான வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விபரம் ஆகஸ்ட் 21-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
எங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால் யாருமே விற்க முடியாது

தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஈரானின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாவிட்டால், எந்தவொரு உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என எச்சரித்துள்ளார். அமெரிக்க படைகள் இல்லாத சூழலில்தான் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved