Also Watch
Read this
By: Admin News Tamil

சூரிய ஆற்றலை நோக்கி உலக நாடுகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இதில் என்ன ஸ்பெஷல் என சொல்லும் விதமாக சூரியனுக்கு அருகிலேயே சென்று ஆற்றலை சேமித்து, அதனை wireless முறையில் பூமிக்கு கடத்தும் முயற்சியில் இறங்கி ஒட்டு மொத்த உலகையும் வாயை பிளக்க வைத்திருக்கிறது சீனா..!
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நிறைந்த உலகில் மின்சாரம் என்பது இன்றியமையாத தாக மாறியுள்ளது. பிறக்கும் குழந்தையை இன்குபேட்டரில் வைப்பது முதல் இறந்த உடலை எரியூட்டுவது வரை அனைத்தும் மின் மயம் ஆக மாறியுள்ள நிலையில், அதற்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயமும் உருவாகியுள்ளது. நீர், அனல், அணு, காற்று என மின்சாரத்தை உருவாக்க பல வழிமுறைகள் இருந்தாலும், செலவில் குறைவாகவும் அதேசமயம் விரைவாகவும் கிடைக்கக் கூடியது சூரிய ஆற்றல் மட்டுமே.
காலத்திற்கும் அழியாத சூரியனில் இருந்து பூமிக்கு வரும் ஒளிக் கற்றைகள், சூரிய தகடுகள்
மீது நேரடியாக படும் போது அவை மின்சாரமாக மாறுகின்றன. இதனால் உற்பத்தி செலவு மற்றும் மின்சாரத்தை கடத்த தேவையான பொருட்கள் மிக மிக குறைவு என்பதால் வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமின்றி வளர்ந்த நாடுகளும் இந்த முறையை அதிகமாக பின்பற்ற தொடங்கியுள்ளன. இந்த செயல் முறையை தான் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது சீனா.
அதாவது சீனாவின் Xidian University-ஐ சேர்ந்த ஆராய்ச்சி குழு, விண்வெளியில் மிகப்பெரிய மின்சார நிலையம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. பூமியில் சூரிய ஆற்றலின் அடர்த்தி பொதுவாக ஒரு சதுர மீட்டருக்கு 200 முதல் 300 வாட்ஸ் வரை மட்டுமே இருக்கும். ஆனால் அதுவே விண்வெளியில் இருக்கும் போது அதனை காட்டிலும் 6 மடங்கு அதிகமாக கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதற்காக விண்வெளியில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்படும். இவை நேரடியாக சூரியனின் பார்வையில் இருப்பதால் அதிகளவில் ஒளிக் கற்றைகளை உள்வாங்கி அவற்றை மின்சாரமாக மாற்றி அங்கேயே சேமித்து வைத்துக் கொள்ளும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இது வரையிலான பணிகள் சுலபமாக தெரிந்தாலும், சேமித்த மின்சாரத்தை பூமிக்கு கொண்டு வருவது தான் பெரிய சவாலாக உள்ளது. விண்வெளியில் இருந்து பூமிக்கு ஒயர் இணைப்பு கொடுக்க முடியாது என்ற நிலையில், மின்சாரத்தை wireless மூலமாக கடத்த முடிவு செய்தனர் விஞ்ஞானிகள்..! ஆனால் wireless முறையில் மின்சாரத்தை கடத்துவது என்பது நேரடியான செயல்முறை கிடையாது. முதலில் சேமித்த மின்சாரத்தை Microwave அலைகளாக மாற்றி பூமிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை இங்கு நிலப்பரப்பில் உள்ள Rectenna எனப்படும் ஆண்டெனாக்கள் அவற்றை ஈர்த்து அன்றாட பயன்பாட்டிற்கான நேரடி மின்சாரமாக மாற்றி வழங்கும் என சொல்லப்படுகிறது.
பூமியில் இருப்பது போல் இரவு பகல் மாற்றம், வானிலை காரணங்கள் போன்ற தடங்கள் எதுவும் விண்வெளியில் இல்லாததால் 24 மணி நேரமும் சூரிய ஆற்றலை பெற்று தடையற்ற மின்சாரத்தை வழங்க முடியும் என வியப்பூட்டு கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால், சுமார் 36,000 கிலோமீட்டர் தொலைவில் இருந்து மின்சாரத்தை பூமிக்கு கதிர்வீச்சு மூலம் அனுப்புவதில் பல தொழில்நுட்ப சவால்கள் இருப்பதுடன் மிகப்பெரிய அளவில் பொருட் செலவும் தேவைப்படுகிறது. உதாரணமாக ஒரு சிறிய நகரத்திற்கு தடையற்ற மின்சாரம் வழங்க 1 ஜிகாவாட் மின்சாரம் தேவைப்படும் என்ற நிலையில், அதற்கு பல நூறு மீட்டர் பரப்பளவில் சோலார் பேனல்களை விண்வெளியில் அமைக்க வேண்டும். அவ்வாறு பெரியளவில் பணத்தை வாரி இறைத்து பேனல்களை அமைத்தாலும், அது பூமிக்கு அனுப்பும் மைக்ரோவேவ் கதிர்களின் வலிமை விமானங்களுக்கும் பூமிச் சூழலுக்கும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டியது மிக முக்கியம் ஆகும்.
இவ்வாறு இந்த திட்டத்தை சுற்றி தற்போது பல சவால்கள் இருந்தாலும் விண்வெளியில் சோலார் பேனல் அமைப்பது, wireless முறையில் மின்சாரத்தை கடத்துவது போன்ற எதிர்கால தேவைக்கான அடித்தளமாக சீனாவின் இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved