Also Watch
Read this
By: Manigandan Raja

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியான மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவள விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விழாவிற்குத் தலைமை தாங்கி உரையாற்றினார்.
அப்போது மாணவர்களிடையே பேசிய அமைச்சர், இன்றைய காலகட்டத்தில் மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடாது என்றும், அதிக நேரத்தை அதில் வீணடிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்கால டிஜிட்டல் சூழலில் பல்வேறு ஆபத்துகள் நிறைந்துள்ளதால், முக்கியமாக மாணவிகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது மிகவும் விழிப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் அங்கிருந்த மாணவ-மாணவிகளுடன் இணைந்து தனது மொபைல் போனில் செல்பி வீடியோ எடுத்தார். அப்போது திடீரென உற்சாகமடைந்த மாணவ-மாணவிகள், தமிழக வெற்றிக் கழகத்தைக் குறிக்கும் வகையில் "டிவிகே... டிவிகே..." என தங்களின் அரசியல் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகப் பலத்த கோஷமிட்டு கூச்சலிட்டனர்.
பள்ளி விழாவில், அமைச்சரின் செல்பி வீடியோவிலேயே மாணவர்கள் அரசியல் கட்சி முழக்கமிட்ட இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved