Also Watch
Read this

16 கூட்டு மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை சேர்த்து தயாரிக்கப்படும் கூட்டு மருந்துகள் குறிப்பிட்ட சில நோய்களுக்கு நிவாரணிகளாக வழங்கப்படுகிறது. இந்த கூட்டு மருந்துகளின் பயன்பாடு மற்றும் அதன் திறன் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி கூட்டு மருந்துகளின் தன்மையை ஆய்வு செய்ய மருந்து சார்ந்த சிறப்பு நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்தது. அவர்கள் கலவையான மருந்துகளின் தன்மையை ஆய்வு செய்ததில் மருந்துகளின் பயன்பபாடுகள் முரணாக இருப்பதுடன், தீங்கு விளைவிப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட 16 வகையான கூட்டு மருந்துகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் விநியோகிக்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், பயனுள்ள மற்றும் அறிவியல்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்துவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும் கூறியுள்ளது.
அதாவது அசிட்டைல் சாலிசிலிக் அமிலத்துடன் கூடிய எத்தோஹெப்டசைன், டைசைக்ளாமைன் - பாரசிட்டமால்- சிலிடினியம் புரோமைடு கலவை, குரோமியம் பிக்கோலினேட் - கிளாக்லாசைடு, பாராசிட்டமால் - லிக்னோகைன் போன்ற கூட்டு மருந்துகள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக தடை செய்யப்பட்ட கூட்டு மருந்துகளில் தோல் மற்றும் சரும பராமரிப்புகளுக்கான மருந்துகல் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இத்தகைய தடை செய்யப்பட்ட கூட்டு மருந்துகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள், அமலாக்க முகமைகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved