Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை பாளையங்கோட்டை, மகாராஜா நகர் பகுதியில் விஜயா கார்டன் பார் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக வரும் ஒரு கும்பல், தங்களை த.வெ.க மாவட்டச் செயலாளர் மரியஜான் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி பார் ஊழியர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
வருகிற 30ம் தேதியுடன் அரசு மதுபானக் கூடங்களுக்கான டெண்டர் முடிவடைய உள்ளதை சுட்டிக்காட்டி, இவர்கள் தினசரி பாரில் நுழைந்து பணம் கேட்டு அச்சுறுத்துவது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இது குறித்து பாதிக்கப்பட்ட பார் உரிமையாளர் கூறுகையில், "பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கூடங்களிலும் 30ம் தேதியுடன் டெண்டர் முடிவடைகிறது. இதனைப் பயன்படுத்தி, சமாதானபுரத்தைச் சேர்ந்த த.வெ.க மாவட்டச் செயலாளர் மரியஜானின் மகன் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி சிலர் தினசரி வந்து மாமூல் கேட்டு மிரட்டுகிறார்கள்.
பணம் கொடுக்காவிட்டால் வியாபாரம் செய்ய விடமாட்டோம் என அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். இப்படி வியாபாரம் செய்ய விடாமல் தடுத்தால், நாங்கள் எப்படி அரசாங்கத்திற்கு மாதந்தோறும் கட்ட வேண்டிய டிடி தொகையைச் செலுத்த முடியும்? எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved