Also Watch
Read this
சேலம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அம்பேத்கர் சிலையை பட்டியலின இளைஞர்கள் இரவோடு இரவாக திறந்து வைத்ததால் ஏற்பட்ட பிரச்சினை கடைசியில் கல்லெறியில் முடிந்துள்ளது.. இந்த கல்லெறி கலவரத்திற்கு பின்னால் ஒரு பெண் வருவாய் ஆய்வாளர்தான் உள்ளதாகவும், அவரது தூண்டுதலின்பேரில்தான் பிரச்சனையே பூதாகரமாக வெடித்துள்ளதாகவும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளரும் விசாரணைவளையத்தில் உள்ளார்.

கால் மேல் கால் போட்டு...
ஐந்து ஆண்டுகளாக தகரத்திற்குள் அடைபட்டுக் கிடந்த அம்பேத் சிலையை இரவோடு இரவாக இளைஞர் திறந்து, கடைசியில் கல்லெறியில் முடிய இத்தனைக்கும் காரணம் பெண் ஆர்ஐதான் என ஆடியோ ஒன்று லீக் ஆகி உள்ளது. என்ன நடந்தது?

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அம்பேத்கர் சிலையை அமைத்துள்ளனர்.. பொதுவாக நாற்காலியில் அமர்ந்திருந்தபடியோ அல்லது நின்றபடியோ கையில் சட்டப்புத்தகத்தை வைத்திருப்பதுபோன்றுதான் அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஒதியத்தூர் இளைஞர்கள் அமைத்திருந்த சிலையில் அம்பேத்கர் கால் மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார்.

உரிய அனுமதியின்றி...
அந்த சிலைக்கு அருகிலேயே ராஜீவ் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளும் இருந்த நிலையில் கால்மேல் கால்போட்டபடி அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டதற்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுஒருபுறமிருக்க, ராஜீவ் காந்தி மற்றும் காமராஜர் சிலைகள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும் உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்டிருப்பதாகவும், அம்பேத்கர் சிலை உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளாக...
இந்நிலையில், சமூக பிரச்சினையாக உருவெடுக்க பட்டியலின இளைஞர்கள் வழி வகுப்பதாக கூறி மாற்று சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், ராஜீவ் காந்தி மற்றும் காமராஜர் சிலைகள் போன்றுதானே அம்பேத்கர் சிலையும், அதனால் அந்த சிலை இருப்பதில் என்ன பிரச்சினை? என பட்டியலின இளைஞர்களும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக்கூறினர். இந்த பிரச்சினை பூதாகரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சிலை வைத்த பத்தே நாட்களுக்குள் தகரத்தால் மூடினர் அதிகாரிகள். அதில் இருந்தே, அம்பேத்கர் சிலையை மீண்டும் திறக்கக்கோரி கடந்த 5 ஆண்டுகளாக கோரிக்கைகளை குவித்தனர் பட்டியலின இளைஞர்கள்.

அமைச்சரிடம் கடிதம்
தற்போது தவெக அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அம்பேத்கர் சிலையை மீண்டும் திறக்கக்கோரி அமைச்சர் வன்னி அரசுவை நேரில் சந்தித்து ஒரு லெட்டரை வாங்கி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளனர் சிலை திறப்பு ஒருங்கிணைப்புக்குழுவினர். அதனை வாங்கிய ஆட்சியரும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதற்கான சூழல் கைகூடியதும், சிலையை திறப்பது குறித்து முடிவெடுப்பதாக கூறி உள்ளார். அந்த நம்பிக்கையில் இருந்த சிலை திறப்பு ஒருங்கிணைப்புக் குழுவினர், அதுகுறித்த அப்டேட்டையும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

வெளியான அதிர்ச்சி ஆடியோ
அந்தவகையில், ஒதியத்தூர் வருவாய் ஆய்வாளர் ஜெயாவை சிலை திறப்பு ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த பிரேம்குமார் என்ற இளைஞர் தொடர்பு கொண்டுள்ளார். மேடம், சிலையை திறப்பதற்கான அனுமதியை மட்டும் வழங்குங்கள் என இளைஞர்கூற அதற்கான சாத்தியக்கூறு தற்போதைக்கு இல்லை, குறுக்குவழியில் வேண்டுமானால் செய்து கொள்ள முடியும் என வருவாய் ஆய்வாளர் ஜெயா கூறுவதுபோன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. வருவாய் ஆய்வாளருடன் தாசில்தார் காட்டமுத்துவும் ஒரு வார்த்தை ஆடியோவில் பேசும் நிலையில், இரவுநேரத்தில் மழை பெய்யும்போது சிலையில் உள்ள தகரத்தை அகற்றிவிடுமாறும், அகற்றும்வரை எந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டால் போதும், அகற்றியபின் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது மிக எளிது என்பதுபோல் பேசி உள்ளார் ஜெயா. மக்கள் அசந்து தூங்கும்நேரத்தில் சிலையில் உள்ள தகரத்தை அகற்றிவிடுமாறு அந்த ஆடியோவில் கூறும் வருவாய் ஆய்வாளர், நான்தான் ஐடியா கொடுத்தேன் என்பது தெரியக்கூடாது என்கிறார்.

கல்வீச்சு...
இந்த உரையாடலை தொடர்ந்து இரவோடு இரவாக தகரத்தை அகற்றி அம்பேத்கர் சிலையை திறந்தனர் இளைஞர்கள். இதனால் ஆத்திரமடைந்த மாற்று சமூகத்தினர், உடனடியாக சிலையை மூட வலியுறுத்தியதோடு திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், அம்பேத்கர் சிலையை மீண்டும் மூட வேண்டும் என அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வர கடுப்பான பட்டியலின இளைஞர்கள் ராஜீவ் காந்தி மற்றும் காமராஜர் சிலைகள் மட்டும் இருக்கலாம், அம்பேத்கர் சிலை இருப்பதற்கு மட்டும் ஆயிரம் நெருக்கடியா? எனக்கூறி கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

கலவரத்திற்கு காரணம்
பிரச்சனை பெரும் பிரளயமாக மாறிவிடும் எனக்கருதிய காவல்துறை ஒதியத்தூரில் இருந்த 3 சிலைகளையுமே மூடினர். தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்ட 15 இளைஞர்களை கொத்தாக கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, தாங்களாக திறக்கவில்லை, வருவாய் ஆய்வாளர் கூறியதால் தான் திறந்தோம் என நீதிபதி முன்பு ஆடியோவை பிளே செய்துள்ளனர் இளைஞர்கள். கலவரத்திற்கே காரணம் வருவாய் ஆய்வாளர் தான் எனக்கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்பணியில் காவல்துறை இறங்கிய நிலையில் அது தனது குரலே இல்லை எனவும் டெக்னாலஜி மூலம் இளைஞர்கள் இப்படி ஒரு ஆடியோவை தயார் செய்துள்ளார்கள் எனவும் வருவாய் ஆய்வாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆடியோ குறித்து ஆய்வு
அம்பேத்கர் சிலையை திறப்பதற்கான சாத்தியக்கூறே இல்லையென தான் கூறியதாகவும், பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவரே அனுமதி கொடுக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் தான் அந்த இளைஞர்கள் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளதாகவும் வருவாய் ஆய்வாளர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால், ஸ்பெக்ட்ரோகிராம் பகுப்பாய்வு, ஏஐ கண்டறிதல் மென்பொருட்கள், சூழல் மற்றும் பின்னணி இரைச்சல் ஆய்வு, மெட்டாடேட்டா சரிபார்ப்பு, வார்த்தை உச்சரிப்பு மற்றும் தொனி ஆகியவற்றை ஆராய்ந்து, அந்த ஆடியோவில் வருவாய் ஆய்வாளர்தான் பேசி உள்ளாரா? அல்லது வழக்கில் இருந்து தப்பிக்க அவர் பொய் கூறுகிறாரா? என்பதுகுறித்து அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணை முடிந்தால்தான் கல்லெறிக்கும், கலவரத்திற்கும் விடை கிடைக்கும்.