Also Watch
Read this
By: Manigandan Raja

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சிவா(32). இவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீடு புகுந்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மூன்று மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிவாவின் உறவினர்கள் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரின் பேரில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட சிவா மூன்று மாத காலத்திற்கு பிறகு இன்று வீடு திரும்பியுள்ளார்.
இதற்கிடையில் மூன்று மாத காலமாக குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த சிவாவின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் கருங்குளம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்துங்கநல்லூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் குற்றவாளியை கைது செய்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved