Also Watch
Read this
காவல்துறையினரை துப்பாக்கியால் மிரட்டியதை தொடர்ந்து, தூத்துக்குடி பிரபல ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார்.

காவல்துறை உதவி ஆய்வாளர் காயம்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மரிய அந்தோணி ஆக்னலை கைது செய்ய முயன்ற காவல்துறையினருக்கு எதிராக அவர் நாட்டு துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரிய அந்தோணி ஆக்னல் காயமடைந்து கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபுவும் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

30க்கும் மேற்பட்ட வழக்குகள்
தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய அந்தோணி ஆக்னல் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் மீது துப்பாக்கிச்சூடு
இந்த நிலையில், மரிய அந்தோணி ஆக்னல் குரும்பூர் அருகே சோனகன் விளை கானியாளர் புதூர் விளை முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது, மரிய அந்தோணி ஆக்னல், தன்னிடம் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காட்டி காவல்துறையினரை மிரட்டியதுடன், துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் விசாரணை
அவரை பிடிக்க முயன்ற போது காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபுவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய பதிலடி துப்பாக்கிச் சூட்டில் மரிய அந்தோணி ஆக்னலின் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை கைது செய்த காவல்துறையினர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதே மருத்துவமனையில் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபுவுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ராஜபிரபுவிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.