Also Watch
Read this
By: Web Team

உடலில் உயிர் இருக்கிற வரையில் உழைப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.
சென்னையில் தமது சொந்த தொகுதியான கொளத்தூரில், பல்வேறு நலத் திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
காலையில் இருந்து கிட்டத்தட்ட 2 மணி நேரமாக, நமது கொளத்தூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்நிகழ்ச்சிக்கு வந்த உடன் என்னுடைய களைப்பு எல்லாம் போய்விட்டது.
என் உடலில் உயிர் இருக்கிற வரை, கருணாநிதி கற்றுத் தந்திருக்க கூடிய அந்த உழைப்பு, என் உதிரத்தில் இருக்கும் வரை, உறுதியாக நான் என் கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் இருக்கிறேன், என்னமோ தெரியவில்லை. கொளத்தூர் வந்து விட்டால் எனக்கு இப்படி எல்லாம் பேச தோன்றுகிறது.

உங்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது, அனிதா அகாடமியில் பெற்றுள்ள பயிற்சி, சிறிய துவக்கம் தான். இதே பாதையில் வெற்றி பெற தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மனிதர்களின் வேலைச்சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்து கொண்டு வருகிறது. இதற்கு ஏற்ற மாதிரி நீங்களும் அப்கிரேட் ஆகி வர வேண்டும். அது தான் எனது விருப்பம்.
நிறைய ஆன்லைன் கோர்ஸ் இருக்கிறது. எது உதவியாக இருக்குமோ, அதனை தேர்வு செய்து கற்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. படித்து விட்டோம், வேலை கிடைத்துவிடும் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். தொடர்ந்து படித்து கொண்டே இருங்கள்.

படிப்பு தான் உங்களுக்கு கடைசி வரை துணை நிற்கும். அது தான் உங்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கூடிய, கல்வியால் பெறப்படும் அறிவினை கொச்சைப்படுத்த சிலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, எதிர்காலத்திற்கு என்ன தேவையோ அதனை நோக்கி நடை போட வேண்டும்.
தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது. தமிழகத்தின் அடுத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த கல்வி இருக்கிறது. அதனை நீங்கள் நல்ல வகையில் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.