Also Watch
Read this
தாம் ஏதாவது பேசினாலும் பிரச்சனை, பேசாமல் இருந்தாலும் பிரச்சனை என ரஜினிகாந்த் கலகலப்பாக பேசினார். பிடித்தவர்களிடமும் வெறுப்பவர்களிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், தர்மன் பட விழாவில் அறிவுரை வழங்கினார்.
வாயில் என்ன கொழுக்கட்டையா?
தர்மன் பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது;
என்னை மேடையில் பேச அழைக்கிறோம் என்று கூறும் போதே எனக்கு பயமாக உள்ளது. ஏனென்றால், நான் பேசினாலே பிரச்சினை தான். ஒன்று, எனக்கு பிரச்சனை வரும், இல்லை என்றால் மற்றவர்களுக்கு பிரச்சனை வரும். சமூக வலை தளங்களில் ஏதாவது ஒன்றை கிளப்பி விட்டுக் கொண்டே, எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். நான் சும்மா இருந்தால், என்ன இவர் பேசவே மாட்டேன் என்கிறார், வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்து இருக்கிறார்? என்று கிண்டல் செய்வார்கள். சரி பேசலாம் என்று வந்தால், 'இப்ப பேசுங்க' என்று வம்பு இழுப்பார்கள்.

ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
ரொம்ப நாள் கழித்து தான் ஒரு உண்மையை, தெரிந்து கொண்டேன். நம்மை பிடிக்காதவர்களுக்கு, நாம் எது செய்தாலும், அவர்களுக்கு நம்மை பிடிக்காது. அதேபோல, நம்மை பிடித்தவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்கும் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம். இதனால் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நான்காவது இயக்குநர்...
‘சிவாஜி’ திரைப்படத்தின் போதே, ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ண வேண்டும் என்று கமல் கேட்டார். அதன் பிறகு அவரும் பிஸி, நானும் பிஸி. கடைசியாக என்னைச் சந்தித்த போது, கட்டாயம் ஒரு படம் பண்ண வேண்டும் என்றார். உடனே, நானும் சரி பண்ணுவோம் என்று சொன்னேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த படத்திற்கு அஸ்வந்த் மாரிமுத்து நான்காவது இயக்குனர். முதலில் ரவிக்குமாரை யோசித்தோம். அதன்பிறகு சுந்தர் சி. ஆனால், அவருக்கு வேறு ஒரு படம் இருந்ததால் வர முடியவில்லை. அதன் பிறகு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அது மிகவும் சென்சிட்டிவ் சப்ஜெக்ட், அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டோம். அதன் பிறகுதான் அஸ்வந்த் மாரிமுத்து வந்தார்.

கமல் வார்த்தையால் டென்சன்
அஸ்வந்த் வந்த பிறகு என்னிடம் வந்து, நான் கதை கேட்க மாட்டேன், அனைத்தையும் உங்களிடமே விட்டு விடுகிறேன் என்று கமல் கூறி விட்டார். கமல் சொன்ன அந்த வார்த்தை தான், என்னை மேலும் டென்ஷன் ஆக்கி விட்டது. அவ்வளவு பெரிய ஜாம்பவான் என் மீது முழு பொறுப்பையும் போட்டு விட்டார். அதன் பிறகு 'இந்த கதை ரிஸ்க் எல்லாம் வேண்டாம், நீங்களும் கதையைக் கேளுங்கள்' என்று கமலிடம் சொன்னேன். அதன் பிறகுதான் அஸ்வந்த் மாரிமுத்துவிடம் கதையைக் கேட்டு நன்றாக இருக்கிறது என்று கமல் கூறினார். அஸ்வந்த் மிகவும் எனர்ஜியான இயக்குநர் அவருடைய 'டிராகன்' படம் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கமல் நட்பு, ரஜினி நெகிழ்ச்சி
கமலுக்கும் எனக்கும் இருக்கிற நட்பை எவ்வளவு சொன்னாலும் அது குறைவாகத் தான் தெரியும். என் சினிமா வாழ்வில், ’இளமை ஊஞ்சலாடுகிறது' படம் வெற்றியை தேடித் தந்த படம். அந்த படத்தில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை. அதில் முதலில் நடிக்க இருந்தது ஜெய்சங்கர். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரிடம் கமல், பரிந்துரை செய்தார். அதன் பிறகுதான் இயக்குனர் என்னை அழைத்து, அந்த படத்தில் நடிக்க வைத்தார்.

'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் நடிக்கும் வாய்ப்பே எனக்குக் கமலால் தான் கிடைத்தது. இதுபோல எனக்கு கமல் செய்த உதவிகளை கூறிக் கொண்டே போகலாம். ராஜ்கமல் தயாரிப்பில் இந்த 'தர்மன்' படத்தில் நான் நடிப்பது மிகப்பெரிய சந்தோஷமாகவும், மிகப்பெரிய பொறுப்பாகவும் உள்ளது. 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை 25ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.