Also Watch
Read this
Posted on: Mar 12, 2026 11:29 AM
By: Fyrose Banu

மணக்குடியில் கட்டி முடிக்கப்பட்டு நாளை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ள புதிய பேருந்து நிலையம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சுரண்டினால் பெயர்ந்து சிதறும் சாலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ரூ.24 கோடியில் புதிய பேருந்து நிலையம்
மணக்குடி கிராமத்தில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. 5183 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 28 பேருந்துகள் நிற்கும் வகையிலும், நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 49 கடைகள் பயணிகள் காத்திருக்கும் இடங்கள் 10, உணவகங்கள் பொருட்கள் வைப்பறை தாய்மார்கள் பாலூட்டம் வரை காவல்துறை கட்டுப்பாட்டு அறை, நேர காப்பாளர் அறை, கழிவறைகள் ஆகிய வசதிகள் உடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு
இந்த பேருந்து நிலையம் கட்டப்படும் பொழுது கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பேருந்து நிலையம் திறப்பது மிகவும் தாமதமாகி வந்தது. இந்நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பந்தல் ஏற்பாடுகள் வாழைமரம் கட்டுதல் விட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தார் சாலையை காலால் தேய்த்தால் போதும்
இந்நிலையில் கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, பேருந்து நிலையத்தின் தார் சாலையை காலால் தேய்த்தால் சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து உதிர்வது தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்தான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் எதுவும் இல்லாமல் அடிப்படை வசதிகள் இன்றி பேருந்து நிலையம் இருப்பதும், டைல்ஸ்கள் இல்லாமல் வெறும் சிமெண்ட் தரையால் கடைகள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பணிகளை தரமாக மேற்கொள்ள கோரிக்கை
பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான சுற்றுவட்ட புறவழிச் சாலை பணிகள் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், மயிலாடுதுறை நகரம் வழியாக கிராமத்திற்கு சென்று வந்து மீண்டும் திரும்புவதற்கு பொது மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்றும், குறைகளை சரி செய்து அதன் பின்னர் பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்றும், பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved