Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரியத்துடன் 82 வயதுடைய தந்தை, மகளுக்கு சீர் சுமந்து சென்றார். 12ஆவது ஆண்டாக, இந்தாண்டும் தனது பாச மகளுக்கு ஐந்து கரும்புகளை தலையில் வைத்துக்கொண்டு பொங்கல் சீரை சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் 16 வேகத்தடைகளை கடந்து சைக்களிலேயே கொண்டு சென்றது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரியம் பொங்கல் சீர்
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமும் கலாச்சாரமுமாக உள்ள பொங்கல் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுப்பவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது அவரவர் வசதிக்கேற்ப பொங்கல் சீர் வழங்குவது தமிழர்களின் வாடிக்கையாக உள்ளது.

12 ஆண்டுகளாக விடா முயற்சி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி அமிர்தவள்ளி. இவர்களுக்கு சுந்தராம்பாள் என்ற மகளும் முருகேசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சுந்தராம்பாளை சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சுந்தரம்பாளுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அதற்கு முன்பு வரை ஆயிரம் ரூபாய் பொங்கல் சீராக கொடுத்து வந்த நிலையில் மகளுக்கு குழந்தை பிறந்த தினம் முதல் இன்றைய தினம் வரை தொடர்ச்சியாக, 12 ஆண்டு காலமாக பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் இருக்கவும் மகள் மீது கொண்ட பாசத்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் சீர் வழங்கி வருகிறார்.

வழி நெடுகிலும் பொங்கல் வாழ்த்து
இவர் 82 வயதிலும், தமது சைக்களில், காலண்டர், தேங்காய், பழம், மஞ்சள் கொத்து, வேட்டி, துண்டு, பொங்கல், பூ, பச்சரிசி, வெல்லம், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் சீரை வைத்துக்கொண்டு ஐந்து கரும்புகளை தலையில் சுமந்து கொண்டு, அவரது சைக்களை ஓட்டி சென்று வருகிறார். வடக்கு கொத்தக்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் 16 வேகத் தடைகளை கடந்து நம்பம்பட்டி வரை சைக்களிலேயே அவர் பொங்கல் சீர் கொண்டு செல்வதை சாலை நெடுகிலும் உள்ள மக்கள் கண்டு வியந்து வருவதோடு, கைகளை காட்டி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

பதாகை வைத்து வாழ்த்து
காலங்கள் கடந்தும் தமிழனின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு சான்றளிக்கும் விதத்திலும் தமிழர்கள் என்றாலே பாசத்துக்கு பெயர் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது மகளுக்கு பாரம்பரியமாக பொங்கல் சீர் வழங்கி வரும் தந்தைக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும், கொத்தக்கோட்டை வர்த்தகர்கள் சார்பில்
மகளுக்கு சீர் எடுத்துச் செல்லும் செல்லத்துரைக்கு, விளம்பர பதாகை வைத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதையும் பாருங்கள் - தனியார் கல்லூரியில் களை கட்டிய பொங்கல் விழா
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved