Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வெளியாரி கிராமத்தில் கருப்பையா - முத்துக்காளி தம்பதியினரின் 3 மகன்களான சண்முகநாதன், சரவணன், சந்தோஷ் ஆகியோர் தனது தாய்க்காக எழுப்பிய கோயிலில் இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி இன்று விமர்சையாக நடைபெற்றது.
இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்குவதற்காக ஒரு அணிக்கு 9 பேர் வீதம்126 வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு விளையாட அனுமதிக்கப்பட்டது. இதில் வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து போராடி அடக்கினர். இருப்பினும் சீறிப்பாய்ந்து காளைகள் வீரர்களை பந்தாடியது.
மேலும் காளைகள் முட்டியதில் 10 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட 14 காளைகளின் உரிமையாளர்களுக்கு சிங்கம்பூர் சென்று வர இலவச விமான டிக்கெட் பரிசுகளாக வழங்கப்பட்டது.

இதேபோன்று களத்தில் இறங்கிய 126 மற்றும் சப்ஜூட் வீரர்கள் 28 என 154 மாடுபிடி வீரர்களுக்கும் ஸ்மார்ட் வாட்ச் பரிசுகளாக வழங்கப்பட்டது. மேலும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் 20,004 சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.
இன்று களத்தில் வெயிலின் தாக்கத்தால், வீரர்கள் திடலில் நிற்க்க முடியாத நிலையிலும் கூட கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், புழுதி பறக்க களத்தில் மிரட்டிய காளைகளை போராடி
அடக்கினர்.
இந்த மஞ்சுவிரட்டை காண பல்லாயிரகணக்கான பொதுமக்கள், திரண்டிருந்தனர். மஞ்சுவிரட்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி, விசில் அடித்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார், மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர்
ராஜசேகர், தவெக மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் உட்பட ஏராளமான பொதுமக்கள், பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
தாய்க்காக அமைத்த ஆலயத்துக்கு வருடாபிஷேக விழா நடத்தி, இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியும் நடத்தியதை அறிந்த அப்பகுதியினர் 3 மகன்களையும் வாழ்த்தியதோடு மனதார பாராட்டி சென்றனர்.