Also Watch
Read this
By: Manigandan Raja

நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமி தனது 12 வயது மகள் சந்திக்காவுடன், சந்தை மைதானம் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் கடந்த பல வருடங்களாக வசித்து வருகிறார்.
கணவரை பிரிந்து சென்ற நிலையில் கூலி வேலை செய்து தனது மகளை படிக்க வைத்து வரும் லட்சுமி, மின்சாரம், குடிநீர், பாதுகாப்பான வீடு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகிறார்.
மூன்று தகர சீட்டுகளை மட்டும் வைத்து அமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில், துணிமணிகள் கூட சிமெண்ட் பைகளில் பாதுகாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் செய்யும் இடத்திற்கும் பாதுகாப்பு இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழலில் வசித்து வருவதால், அப்பகுதியில் வரும் போதை ஆசாமிகளால் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் லட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லட்சுமி, தனது மகள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே தனது கனவு எனவும், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவி சந்திக்கா கூறுகையில், "எனது அப்பாவை இதுவரை பார்த்ததில்லை. எனது அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். நன்றாக படித்து எனது அம்மாவை நான் பார்த்துக் கொள்வேன்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பான வீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு சிறுமி உருக்கமான கோரிக்கை விடுத்தார். இதனை நியூஸ் தமிழ் செய்தி சேனல் வழியாக கடந்த 23ஆம் தேதி செய்தி
வெளியிடப்பட்டது அதன் எதிரொலியாக மாவட்ட காவல் துறை சார்பில் சிங்க பெண் அதிரடிப்படை அங்கு சென்று சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்தது.
அதேபோல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அந்த சிறுமிக்கு பாதுகாப்பாக ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கவும், வீடு வழங்கும் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நியூஸ் தமிழ் வாயிலாக வெளியிடப்பட்ட இந்த சிறுமியின் சோக கதையை பார்த்த நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் தவெக நிர்வாகி சம்பவ இடத்திற்கு வந்து அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறினார்.
அதுமட்டுமின்றி ஒரு மாதத்திற்கான மளிகை செலவு மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் மேலும் தனது சொகுசு காரில் அழைத்துச் சென்று துணிக்கடையில் 5 செட் துணிமணிகளை எடுத்து கொடுத்தார். அதுமட்டுமின்றி கடைசி வரை சிறுமி படிக்க எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் அதனைக் கொடுக்க தயார் எனவும் அதேபோல படிப்பு செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும்
உறுதியளித்தார்.
அதன் பின்பு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்த சிறுமியை பார்த்து இனிமேல் உனது எதிர்காலம் நன்றாக இருக்கும் எனவே சிரிங்க என கூறி அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். அதேபோல சிறுமியின் சோக கதையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நியூஸ் தமிழ் சேனலுக்கும் நன்றியை தெரிவித்தார்.