Also Watch
Read this
Posted on: Jan 26, 2026 12:35 PM
By: Manigandan Raja

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் காவடி தூக்கிக் கொண்டு வந்த நகரத்தார்களுக்கு கல்லும் முள்ளும் குத்தாமல் இருப்பதற்காக சாலை மற்றும் வயல், கண்மாய் கரைகளில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை சிவப்பு மற்றும் பச்சை கம்பளங்கள் விரித்து வரவேற்பு கொடுத்தனர்.
காரைக்குடி, தேவகோட்டை, கண்டனுார், புதுவயல், பள்ளத்துாரை சேர்ந்த நகரத்தார்கள் ஆண்டுதோறும், குன்றக்குடியில் ஒன்றுகூடி அங்கிருந்து பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர் வழியாக தங்களது
முன்னோர்கள் சென்று வந்த பாதையிலேயே சுமார் 420 ஆண்டுகளாக இன்றளவும் காவடிகளை தோலில் சுமந்து சென்று பழனி முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் 21 நாள் பயணமாக குன்றக்குடியில் இருந்து பாதயாத்திரையாகவே பழநிக்குச் செல்லும் இவர்கள் தங்கள் முன்னோர்கள் கடந்து வந்த காடு வயல் கண்மாய் என பழமை மாறாமல்
அதே பாதையில் சென்று வருவது இவர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டாகும்.
இந்நிலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நலன் கருதி நகரத்தார்கள் சார்பில் சுமார் 6 கிலோ மீட்டர் வரை சிவப்பு பச்சை கம்பளம் விரித்து பக்தர்களை நகரத்தார்கள் வரவேற்றனர். முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் என 340 க்கும் மேற்பட்ட காவடிகளை சுமந்து வந்த பக்தர்கள் கண்டரையான்பட்டி ஸ்ரீ தண்டாயுதபாணி மடத்தில் தங்கி ஓய்வெடுத்து பின்பு அங்கிருந்து மீண்டும் யாத்திரையைத் தொடங்கினர்.
தைப்பூசத்தன்று பழநி சென்றடையும் இக்காவடிகள், மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்தி வழிபாடுகளை நிறைவு செய்வார்கள். பின்பு தரிசனம் முடித்து திரும்பும்போதும் காவடிகளை சுமந்து நடைபயணமாகவே வருவது குறிப்பிடதக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved