Also Watch
Read this
By: Manigandan Raja

யார் எருதை முதலில் கட்டுவது :
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழமையான பட்டாளம்மன் கோவில் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன்
வெகுவிமரிசையாகத் தொடங்கியது.
இந்த விழாவானது தாதம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏழு கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் முக்கிய விழாவாகும். திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, ஊரின் மையப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் முன்பாக பாரம்பரிய 'எருது விடும் விழா' நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்காக அங்குள்ள கல்கம்பத்தில் எருதுகளைக் கட்டி பூஜைகள் செய்வது வழக்கம். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது எருதைக் கொண்டு வந்து பூஜைக்குத் தயாரானார்.
அதே நேரத்தில், ஜெகதீசன் என்பவரும் தனது எருதைக் கொண்டு வந்துள்ளார். கல்கம்பத்தில் யாரது எருதை முதலில் கட்டி பூஜை செய்வது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். விழாக் கோலம் பூண்டிருந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த மோதலால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிதறியோடினர்.
கோவில் திருவிழாவில் ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.