Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 02:08 PM
By: Manigandan Raja

விரைவில் திருமணம் நடக்க வழிபாடு :
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு புற்று நாகாத்தம்மன் கோவிலில் நடைபெற்ற வினோத ஆன்மிக நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திருமணமாகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் கல்யாணம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், வேம்பு மரத்துக்கும் அரச மரத்துக்கும் திருக்கல்யாணம் நடத்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் வளாகத்தின் பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர்ந்துள்ள வேம்பு மற்றும் அரச மரங்கள் இப்பகுதி மக்களால் தெய்வீக மரமாக கருதப்படுகின்றன. அரச
மரம் சிவபெருமானாகவும், வேம்பு மரம் பார்வதியாகவும் பாவித்து வழிபட்டு வந்தனர்.
இதனால், இந்த இரு மரங்களுக்கும் திருமணம் நடத்தினால் திருமண தடை நீங்கி விரைவில் நல்ல துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும் பிரசித்தி பெற்ற இந்த சுயம்பு புற்று நாகாத்தம்மன் கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து வேம்பு, அரசமரத் திருக்கல்யாணத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்தனர். உலக அமைதி நிலைக்கவும், மழை சிறப்பாக பெய்து விவசாயம் செழிக்கவும், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் வரன் கிடைக்கவும் வேண்டி இந்த வழிபாடு நடத்தப்பட்டது.
அதன்படி இன்று காலை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, மகா அபூர்ணாகுதி, மகா தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 10 மணி அளவில் வேம்பு மரத்திற்கு மஞ்சள் கயிற்றால் ஆன தாலி கட்டி, அரச மரத்துடன் திருமணம் நடத்தப்பட்டது.
உண்மையான திருமண விழாவை ஒத்திருக்கும் வகையில் சிவ வாத்தியங்கள், மேள தாளங்கள் முழங்க, சீர் வரிசைகள் சுமந்து வந்த பக்தர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் வளாகம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது. கலந்து கொண்ட பக்தர்கள் மொய் பணம் செலுத்தி தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருமண வயதை கடந்தும் வரன் அமையாமல் உள்ள இளைஞர்கள் பலர் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு, தங்களது வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
மேலும், இந்த விழாவில் சிவாச்சாரியார்கள், சந்நியாசிகள், ஆதீன மடாதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பூஜைகளை நடத்தி ஆன்மிக சிறப்பை உயர்த்தினர். பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் இந்த வேம்பு-அரச மரத் திருமண விழா, சமூக ஒற்றுமையையும் ஆன்மிக ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved