Also Watch
Read this

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுக்கசிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மூவர் சிறையில் அடைப்பு
அம்மோனியா கசிவு விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த வழக்கில் கைதான இறால் பதப்படுத்தும் ஆலை உரிமையாளர்கள் உள்பட மூவர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூலை 6ம் தேதி வரை, 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்க, ஊத்துக்கோட்டை மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அம்மோனியா வாயு கசிவு துயரச் சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம், ஆலைக்கான அனுமதி உள்ளிட்ட விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இடைக்கால அறிக்கை தாக்கல்
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. இந்த கொடூர விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட 3 நபர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு, தற்போது முதலமைச்சர் விஜயிடம் தனது முதல் கட்ட இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அதிரடி நடவடிக்கை
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் ஆகியோர் அடங்கிய இக்குழு, விபத்துக்கான காரணம் மற்றும் தொழிற்சாலையின் பாதுகாப்பு குறைபாடு குறித்த அதிர்ச்சி தரும் தகவல்களை இந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தின் மீதும், பாதுகாப்பு விதிமீறல் குறித்தும் தமிழக அரசு தரப்பில் கடுமையான அதிரடி நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.