Also Watch
Read this
நமது சிறிய வயதில் இருந்து உயிரை உருவாக்குவது, இயற்கையால் மட்டும் தான் முடியும் என்று நினைத்திருப்போம். ஆனால், அறிவியல் அந்த எல்லையையும் கொஞ்சம் கொஞ்சமாக தாண்டி உள்ளது. இதற்கு மிகப்பெரிய உதாரணம் தான் ஆய்வகத்தில் செயற்கை உயிரணுக்களை உருவாக்கி இருப்பது...

அமெரிக்க ஆய்வகத்தில்...
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு Spud Cells என்று ஒரு செயற்கை உயிரணுவை உருவாக்கி உள்ளனர்.

இது, சாதாரண ஒரு வேதிப்பொருள் கலவை அல்ல. ஒரு உயிர் உருவாக தேவைப்படக்கூடிய சில முக்கியமான பண்புகள், இதில் இருக்கிறது.

உதாரணத்துக்கு, இந்த உயிரணு தனக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை தானே உற்பத்தி செய்து, வளர்கிறது. இதுமட்டுமின்றி, தன்னைத்தானே பிரித்துக் கொண்டு, புதிய உயிரணுக்களையும் உருவாக்குகிறது. அதாவது, இது உயிரோட முக்கியமான இரண்டு குணங்களான வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
செயற்கை உயிரணு

விஞ்ஞானி கிரேக்வென்டர்...
இதற்கு முன், 2010ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி கிரேக் வென்டர் தலைமையிலான குழு, ஒரு பாக்டீரியாவின் முழு மரபணுவை ஆய்வகத்தில் உருவாக்கி, அதனை இன்னொரு உயிரணுக்குள் செலுத்தி வெற்றிகரமாக செயல்பட வைத்தனர். அப்போது, உலகம் முழுக்க பெரிய சாதனையாக, பேசப்பட்டது. ஆனால், தற்போது வந்திருக்கும் இந்த ஆராய்ச்சி அதைவிட இன்னும் ஒரு படி முன்னே சென்றுள்ளது. ஏனென்றால், உயிரணுவின் அடிப்படை அமைப்பையே புதியதாக உருவாக்க முயற்சித்து உள்ளனர்.

மிகவும் பயனுள்ள ஆய்வு
இந்த கண்டுபிடிப்பால், எதிர்காலத்தில் நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மருத்துவத் துறையில் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கலாம். புற்றுநோய் மாதிரி கடினமான நோய்களுக்கு நல்ல சிகிச்சை முறைகளை உருவாக்கலாம்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி பயனுள்ள பொருட்களாக மாற்றும் நுண்ணுயிரிகளை உருவாக்கலாம். உயிரி எரிபொருள் தயாரிக்கவும், விவசாயத்துக்கும், தொழிற்துறைக்கும் இந்த ஆராய்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எதிர்காலத்தில்...
அதே நேரத்தில், சில கேள்விகளும் எழுகிறது. மனிதன் செயற்கையாக உயிரை உருவாக்குவது சரியானதா? இதை யாராவது தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தினால் என்ன ஆகும்? சுற்றுச்சூழலுக்கு ஏதாவது பாதிப்பு வருமா? என்று, நிறைய விஷயங்களை கவனமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதனால், இந்த மாதிரி ஆராய்ச்சிகள் எல்லாமே கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ்தான் நடைபெறுகிறது. முடிவாக, ஆய்வகத்தில் செயற்கை உயிரணுவை உருவாக்கியது அறிவியல் உலகத்தில் ஒரு மிகப்பெரிய சாதனை. இது ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் மருத்துவம், சுற்றுச்சூழல், விவசாயம், தொழில்நுட்பம் என்று பல துறைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வரக்கூடிய திறன் உண்டு என்றே கூறலாம்...