Also Watch
Read this
தமிழக முதலமைச்சர் விஜய், பெங்களூரு வர வேண்டாம் என கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்ட களமாக சூழல் மாறி உள்ள நிலையில் விருந்தினராக வருவது சரியாக இருக்காது என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சூழல் உகந்ததாக இல்லை...
இதுகுறித்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறி இருப்பதாவது;
பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களை நேரில் சந்தித்து விவாதிக்க விரும்புவதாக தமிழக முதல்வரின் அலுவலகத்திலிருந்து எங்கள் தலைமைச் செயலாளருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி இருவரும் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டோம். இருப்பினும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளுக்குப் பிறகு, தற்போதைய சூழல் அதற்கு உகந்ததாக இல்லை என்று நான் கருதுகிறேன்.
பயனடையும் வகையில் தீர்வு

மேகதாது தமிழகத்திற்கு நன்மை...
உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான வழிகாட்டுதலையும், தீர்ப்பையும் வழங்கி உள்ளது. மேகதாது அணை திட்டத்தைப் பொறுத்தவரை, அது எங்களை விடத் தமிழகத்திற்கே அதிக பலன் அளிக்கக்கூடியது. மின் உற்பத்தியைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் தமிழகத்திற்கு அதிக நன்மையை அளிப்பதாகவே உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவு
ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம். எந்தவொரு உத்தரவையும் மீற நாங்கள் விரும்பவில்லை. அதேவேளையில், எங்கள் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இதுகுறித்த தகவல்களைத் தெரிவிப்பது எனது கடமை.
அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் அளித்து வருகின்றனர்.

இரு மாநில நலன் கருதி...
அரசியல் நோக்கங்கள் மற்றும் கருத்துக்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், மாநிலத்தின் நலன் கருதி அவர்கள் எங்களுக்கு உதவுகின்றனர். நாங்கள் அவர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாகக் கருதி செயல்படுவோம். நாளை மறுநாள் அவர்களைச் சந்திக்க உள்ளோம். இதற்கிடையில், இரு மாநிலங்களின் நலன் கருதி அமைதியான மற்றும் சுமுகமான சூழலில் சந்திப்பை மேற்கொள்ளும் வகையில், தமிழக முதல்வரிடம் இந்தச் சந்திப்பைச் சிறிது காலம் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

போராட்டங்கள் நடந்தால்...
தற்போதைய சூழலில், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் . பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது. தமிழக முதல்வர் கர்நாடகா வரும்போது இங்கே போராட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்காது.
இவ்வாறு கர்நாடக முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.