Also Watch
Read this
ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கலாகிறது த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட். சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தாக்கலாகிறது வேளாண் பட்ஜெட். திமுக அரசை தொடர்ந்து த.வெக. ஆட்சியிலும் வேளாண்மை துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது குறித்து தனக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்ததுடன், முதலமைச்சர் குறித்த அவதூறு பேச்சு குறித்து புகார் அளிக்கப்பட்டால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

வியந்து போற்றும் பட்ஜெட்
இதுதொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியதாவது;
2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு பேரவையில் தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அலுவல் ஆய்வுக் கூட்டம் நடக்கும். அப்போது, பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடந்துவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படும். சட்டப்பேரவை நடவடிக்கை முழு நேரலை செய்யப்படும். சட்டப்பேரவையில் முன்னர் கடைப்பிடித்து வந்த நடவடிக்கை தான் தற்போதும் தொடரும். வாக்களித்த மற்றும் வாக்களிக்காத பெருமக்களும் வியந்து போற்றி பாராட்டுகின்ற அளவுக்கு இந்த நிதிநிலை இருக்கும் என்று நம்புகிறேன்.

அமைதியாக சட்டப்பேரவை...
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து எம்எல்ஏக்களும், முழு விவாதத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை சொல்ல அனைத்து உரிமையும் உள்ளது. மாற்றுக் கருத்து சொல்லப்படும் போது, அமைதியாக இருந்து அதைக் கேட்டு விவாதித்து, பின்னர் பதில் கூற வேண்டும். இந்த முறையும் சட்டப்பேரவை அமைதியாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்

திமுக எம்எல்ஏ கைது, விளக்கம்
பேரவைக்கு வெளியே நடக்கின்ற நிகழ்வுகளில் சட்டமன்ற பேரவை தலைவர் எப்படி ஈடுபடலாம் என்ற விளக்கத்தை சொல்கிறேன். பேரவையின் அமைப்பு எல்லைக்குள், 291 விதியின்படி, கைது செய்யக்கூடாது.

அதேபோன்று உரிமையியல் அல்லது குற்றவியல் நீதிமன்றங்களின் உத்தரவையையோ அல்லது கட்டளையையோ பேரவை தலைவரின் முன் அனுமதி இன்றி, பேரவையின் அமைப்பு எல்லைக்குள் சேர்ப்பித்தல் கூடாது. அமைப்பு எல்லை என்பது சட்டமன்ற பேரவை உறுப்பினர்களை பொறுத்தவரை பேரவை மண்டபம், அதன் பிற மண்டபங்கள், அமைச்சர், அறைகள், தலைமைச் செயலகத்தில் இருந்து சட்டமன்ற குழுக்கள் கூடும் நூலகம், சிற்றுண்டி வளாகம், அண்ணாசாலை அரசினர் தோட்டத்தில் உள்ள உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள உறுப்பினர் கூடும் அறை மற்றும் பேரவைத்தலைவரால் அவ்வப்போது குறிப்பிடப்படும் இடங்கள் ஆகியவை மட்டுமே ஆகும்.
இவ்வாறு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.