Also Watch
Read this
மதுரை சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையை தடுத்து நிறுத்தக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் சிங்கம்புணரியில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே இந்த தடுப்பணை கட்டப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது.

ஒரு லட்சம் ஏக்கர்...
வடகிழக்கு பருவமழை காலங்களில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கரந்தமலை பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு, மதுரை மாவட்டம் சூரப்பட்டி, பள்ளபட்டி, சிவகங்கை மாவட்டம் அணைக்கரைப்பட்டி, சிங்கம்புணரி வழியாக பாய்ந்து திருப்பத்தூர் வரை செல்கிறது. இந்த பாலாற்றை நம்பி சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் பயன் பெற்று வந்தன.

50 கிராம மக்கள்...
இந்த நிலையில், மதுரை மாவட்டம் சூரப்பட்டி அருகே பாலாறு குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் ஒன்றுகூடிய விவசாயிகள் அங்கிருந்து நடைபயணமாக சிங்கம்புணரி பேருந்து நிலையம் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்...
அப்போது பாலாறு குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி - சென்னை நான்கு வழிச்சாலையில் 50 ஆயிரம் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தனி நபருக்காக தடுப்பணை
தடுப்பணை பணிகளை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள், இதனை நம்பி சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் பயன் பெற்று வருவதாகவும், தடுப்பணை கட்டினால் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்படும் என வேதனையை வெளிப்படுத்தினர்.

சூரப்பட்டி அருகே பாலாறு குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணையால் எத்தனை விவசாயிகள் பயனடைவார்கள் என கேள்வி எழுப்பியுள்ள விவசாயிகள், தனி நபருக்காக மட்டுமே தடுப்பணை கட்டி வருவதாக குற்றம்சாட்டினர்.

வணிகர்கள், வழக்கறிஞர்கள் ஆதரவு
குறிப்பாக, தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே இந்த தடுப்பணை கட்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள், எவ்வளவோ திட்டங்களை கேட்டும் செய்யாத பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த திட்டத்தை மட்டும் விரைந்து நிறைவேற்ற காரணம் என்ன? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

சிங்கம்புணரியில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்ததோடு, வழக்கறிஞர்கள் சங்கமும் ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved