Also Watch
Read this
சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை என்று சி.வி.சண்முகம் காட்டமாக கூறி உள்ளார். எடப்பாடி தொகுதியில் பாமகவின் ஆதரவு இல்லை என்றால் இபிஎஸ் வென்றிருக்க முடியாது என்றும் கூறி உள்ளார்.

தொடர் தோல்வி, புறக்கணிப்பு
இதுதொடர்பாக, விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது;
சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வி அடைந்தது. இதனை தோல்வி என்று சொல்வதை விடவும், முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது என்று தான் கூற வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிசாமியின் தலைமையில் தொடர் தோல்வியை அதிமுக சந்தித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவின் வாக்கு சதவீதமும், மக்களின் நன்மதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது.

எம்ஜிஆர் துரோகியா?
கேள்வி கேட்டதற்காகவே, திமுகவால் வெளியேற்றப்பட்டு, நீதி கேட்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. கேள்வி கேட்டதற்காக தொடங்கப்பட்ட இயக்கத்திலே, இன்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது, பேசக் கூடாது, கருத்து கூறக் கூடாது என்ற விதத்திலே செயல்பட்ட காரணத்தால், இன்று யாருடைய கருத்தையும் கேட்கமாட்டேன், என் குடும்பத்தாரின் கருத்தை மட்டுமே கேட்பேன், யார் பணம் கொடுப்பார்களோ, யார் பணம் பெற்றுத் தருவார்களோ அவர்களின் கருத்தை மட்டுமே கேட்பேன் என செயல்பட்ட காரணத்தால், இன்று மிகப்பெரிய இழப்பை அதிமுக சந்தித்து உள்ளது.

அதிமுக தொண்டர்கள் விரக்தி
அதிமுக ஏன் தோல்வி அடைந்தது? என்ற காரணத்தை அனைவரும் உணர்ந்து உள்ளனர், ஒருவரைத் தவிர. அந்த ஒருவர் தான் இபிஎஸ். ஒரு இயக்கத்துக்கு நம்பிக்கை கொடுப்பது அதன் தலைமை தான். அவர் தான் கட்சிக்கு வழிகாட்ட வேண்டும். எந்த லட்சியத்துக்காக அதிமுக தொடங்கப்பட்டது. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர், தீயசக்தியை ஒழிக்க வேண்டும் என அதிமுகவை தொடங்கினார். அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரின் ரத்தத்திலும் திமுக எதிர்ப்பு ஊட்டி வளர்க்கப்பட்டது. அப்படிப்பட்ட அதிமுகவை, திமுகவோடு இணைந்து முதல்வராக வேண்டும் என நினைத்த போதே அதிமுக தனது சுய நிலையை இழந்திருக்கிறது. அதிமுகவிலிருந்து இன்று நிர்வாகிகள், தொண்டர்கள் கொத்துக் கொத்தாக விலகுகின்றனர். ஆனால், பூனை கண்ணை மூடிக் கொண்டால், உலகமே இருண்டது போல, இது எதுவுமே தெரியாதது போல இபிஎஸ் இருக்கிறார். அவர்களை துரோகி என சொல்கிறார். இன்னும் தனது தவறை உணராமல், இபிஎஸ் பிறரை குறை கூறிக்கொண்டு இருக்கிறார்.

பாமக போட்ட பிச்சை
47 தொகுதிகளில், அதிமுக வெற்றி என பழனிசாமி பெருமையாக சொல்கிறார். அதில், வட மாவட்டங்களில் 31 தொகுதிகளில் அதிமுக வென்றது பாமக போட்ட பிச்சை. பாமக கூட்டணியில் இல்லை என்றால், சேலத்தில் எடப்பாடி தொகுதியில் கூட அவர் தப்பித் தவறி தான் வென்றிருப்பார். பாமக இல்லை என்றால் வடமாவட்டங்களில் அதிமுக வென்றிருக்க முடியாது. சேலத்தை தவிர்த்து பாமக இல்லை என்றால் 7,8 தொகுதிகளில் தான் அதிமுக வென்று இருக்கும். இதுதான் நிதர்சனமான உண்மை, இந்த உண்மையை ஒப்புக் கொண்டு சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஒரு குடும்பத்தின் பிடியில்...
இரண்டு வாரத்துக்கு முன்பு எல்லோரும் இணைந்து செயல்படலாம் என்றார். ஆனால், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும் அதிமுக நிர்வாகிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். தலைமை தங்கள் கருத்தை கேட்க மறுப்பதால், வெளியேறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதல்வராக வரலாம். அதனால் தான் பலரும் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக குடும்பக் கட்சி இல்லை. ஆனால், இன்று அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சென்று கொண்டிருக்கிறது.

வருகிறார் இபிஎஸ் மகன்?
இப்போது, பழனிசாமியின் மகனை அரசியலுக்கு கொண்டுவர நாடகம் ஆடுகிறார்கள். அவரை அரசியலுக்கு நேரடியாக கொண்டுவரட்டும், தவறு இல்லை. ஆனால், நாடகம் போடாதீர். நீங்கள் தான் பொதுச் செயலாளர். எல்லோரிடமும் குறைகள் இருக்கலாம். ஆனால், தலைமை பொறுப்பில் உள்ளவர், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். கட்சியிலிருந்து போகிறவர்கள் போகட்டும் என வெளியேறுவதற்கான சூழலை உருவாக்குகின்றனர். மீண்டும் அதிமுகவை வலிமையான இயக்கமாக உருவாக்க வேண்டும். மக்களிடம், தொண்டர்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கு அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள். தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள். 2024 மக்களவைத் தேர்தலின் போதே தோல்விக்கான காரணத்தை ஆராயச் சொன்னோம், அப்போது நடக்கவில்லை. இப்போதாவது செய்யுங்கள். பொதுக்குழுவை கூட்டி விவாதியுங்கள், செயற்குழுவை கூட்டி தோல்விக்கான காரணத்தை ஆராயுங்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதா...
மாற்றுக் கருத்து கூறியவர்களை கூட எம்ஜிஆர், ஜெயலலிதா அரவணைத்து பொறுப்புகளை வழங்கினர். 1996 தோல்விக்கு தானே பொறுப்பு என தலைவருக்கு உரிய தகுதியோடு ஏற்றுக் கொண்டவர் ஜெயலலிதா. ஆனால், இத்தனை தொடர் தோல்விக்கு யாருமே பொறுப்பேற்க மறுக்கிறார்கள். 1996 தோல்விக்கு பின்னர் அனைத்துக் கட்சிகளின் அலுவலகத்துக்கும் நேரில் சென்று தலைவர்களை சந்தித்து வலுவான கூட்டணி அமைத்து 1998ல் ஜெயலலிதா வென்று காட்டினார். இன்று மம்தாவின் நிலை என்ன?. எனவே கனவுலகத்தில் இல்லாமல் உண்மையை உணருங்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள்
அதிமுகவை காப்பாற்றுங்கள். எல்லோரையும் அழையுங்கள், வருகிறோம். சரியான பாதையில் செல்வதற்கான நடைமுறையை கலந்துபேசி முடிவெடுங்கள். நாம் என்ன விரோதிகளா?. 8 ஆண்டுகளாக நீங்கள் சொன்ன கருத்தை தானே ஏற்றுக் கொண்டு செயல்பட்டோம். திமுகவோடு செல்வோம் என்ற கருத்தை தான் நாங்கள் ஏற்கவில்லை. காலம் இன்னும் கையை விட்டுப் போகவில்லை. நம் மீது நம்பிக்கையோடு, மக்கள் உள்ளனர். உங்கள் நம்பிக்கையை ஈகோவால், சிலரின் தவறான வழிகாட்டுதலால் சிதைக்காதீர். அதிமுக காப்பற்றப்பட வேண்டும், அதற்காக உடனே கூட்டத்தை கூட்டுங்கள். இல்லையென்றால், நாங்கள் சில காலம் பொறுப்போம். அடுத்த கட்ட வழிமுறை என்னவென்று எங்களுக்கும் தெரியும். எங்களை அந்த நிலைக்கு தள்ளாதீர். இதனை வேண்டுகோளாக வைக்கிறோம்.
இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved