Also Watch
Read this
Sotheby’s ஏலத்தில் சுமார் 482 கோடி ரூபாய்க்கு ஏலம் போன டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு, பேசு பொருளாகி உள்ளது.

ஒரு எலும்புகூடுக்காக...?
இன்றைய காலகட்டத்தில் ஒரு பிரம்மாண்ட சொகுசு பங்களாவையோ, ஒரு தனி விமானத்தையோ, ஏன் தனி தீவையோ வாங்குவதற்கே சில நூறு கோடிகள் இருந்தால் போதும். ஆனால், கிட்டத்தட்ட 6 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு உயிரினத்தின் எலும்புகளுக்காக, நம்மில் யாருக்காவது 482 கோடி ரூபாய் செலவழிக்க தோன்றுமா?

50.1 மில்லியன் டாலருக்கு...
நியூயார்க் நகரின் பிரபல சோத்பிஸ் ஏல நிறுவனத்தில் நடந்த விசித்திரமான ஏலம் ஒட்டுமொத்த உலகத்தையும் திகைக்க வைத்துள்ளது. பிக்காசோவின் ஓவியங்களை விடவும், மெஸ்ஸியின் ஜெர்சிகளை விடவும் பல மடங்கு கூடுதல் விலைக்கு இந்த டைனோசர் எலும்புக்கூடு விலை போயுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, 38 அடி நீளமும் 12.5 அடி உயரமும் கொண்ட இந்த டி-ரெக்ஸ் (T-Rex) எலும்புக்கூட்டிற்கு ‘கஸ்’ (Gus) என்று பெயரிடப்பட்டு உள்ளது. வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நடந்த விறுவிறுப்பான ஏலத்தில், பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நபர் 50.1 மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 482 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

அபெக்ஸ் சாதனையை முறியடித்த கஸ்...
இது, இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர் எலும்புகளிலேயே மிகவும் முழுமையான, 82 சதவீத மண்டை ஓடு சிதையாத மிக அரிதான படிமம் என்பதால் தான் இந்த அசுர விலைக்கு போயுள்ளது.

இதற்குமுன் 2024ஆம் ஆண்டு 'அபெக்ஸ்' என்ற டைனோசர் படைத்த உலக சாதனையை இந்த 'கஸ்' தற்போது முறியடித்துள்ளது.

அறிவியல் ரீதியாக மிகவும் மதிப்புமிக்க இத்தகைய பொக்கிஷங்கள், பணக்காரர்களின் வீட்டு வரவேற்பறையை அலங்கரிப்பதை விட அருங்காட்சியகங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved