Also Watch
Read this
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம்-1 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை ஜூலை 18ஆம் தேதி காலை 11:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ராக்கெட்டை அனுப்ப தயார் நிலையில் உள்ளது.
அமெரிக்காவில் நாசா போன்ற அரசு விண்வெளி நிறுவனம் மட்டுமே கோலோச்சிய காலத்தில், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் நுழைந்து எப்படி உலக விண்வெளி வரலாற்றையே மாற்றி எழுதியதோ, அதே போன்றதொரு வரலாற்றுத் திருப்பம் இந்தியாவிலும் நிகழப்போகிறது.

ஒட்டு மொத்த நாடும்...
நமது இஸ்ரோவுக்கு இணையாக, இந்தியாவின் விண்வெளிப் பாதையைத் தன்வசமாக்கத் தயாராகிவிட்டது 'ஸ்கைரூட்' என்னும் முழுக்க முழுக்கத் தனியார் விண்வெளி நிறுவனம். இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான 'விக்ரம்-1' விண்ணில் பாய்வதற்கான இறுதிக்கட்டப் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் படுவேகமாக நடந்து வருகின்றன.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் நிகழவிருக்கிறது. இதற்கான ஏவுதல் கால அவகாசம் வரும் ஜூலை 18ல் தொடங்கி, ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நீடிக்கிறது. ஒட்டுமொத்த நாடும் மிகவும் உற்றுநோக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்
கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய விண்வெளித் துறையில் கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் தான் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டன. இதன் மூலம், இஸ்ரோவின் வழிகாட்டுதலோடும், இன்-ஸ்பேஸ் அமைப்பின் ஒழுங்குமுறை ஆதரவோடும் தனியார் நிறுவனங்கள் தங்களின் சொந்த ராக்கெட், செயற்கைக்கோள் மற்றும் ஏவுதல் சேவைகளை உருவாக்க முழு அனுமதி வழங்கப்பட்டு, வணிக ரீதியான கதவுகள் திறக்கப்பட்டன.

விண்வெளிப் பயணத்தில் இது வெறும் ஆரம்பமல்ல, இந்தியாவின் வணிக ரீதியான விண்வெளித் துறையின் ஒரு மிகப்பெரிய மைல்கல் என்றே கூற வேண்டும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் என்ற பெருமையை 'விக்ரம்-1' பெறும்.

எதிர்கால வர்த்தகத்தில்...
ஏற்கெனவே, கடந்த 2022ஆம் ஆண்டு ஸ்கைரூட் நிறுவனம் 'விக்ரம்-S' என்ற சப்-ஆர்பிட்டல் ராக்கெட்டைப் பரிசோதனை முறையில் ஏவிப் பார்த்தது. ஆனால், தற்போதைய 'விக்ரம்-1' என்பது ஒரு முழுமையான ”ஆர்பிட்டல் ராக்கெட்' ஆகும். சப்-ஆர்பிட்டல் மற்றும் ஆர்பிட்டல் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சப்-ஆர்பிட்டல் ராக்கெட் என்பது விண்வெளியைத் தொட்டுவிட்டு உடனடியாக பூமிக்குத் திரும்பிவிடும். ஆனால், ஆர்பிட்டல் ராக்கெட்டுகளோ அதிவேகமாகப் பயணித்து, செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுவட்டப் பாதையிலேயே நிலைநிறுத்தி, அங்கேயே தொடர்ந்து சுற்ற வைக்கும் திறன் கொண்டவை. விக்ரம்-1 ராக்கெட்டின் எதிர்கால வணிகரீதியான பயன்பாட்டை உறுதி செய்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஆரம்பகட்ட சோதனைப் பயணங்களில் முதலாவது தான், 'ஆகமன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம்.

இஸ்ரோவின் முன்னாள் பொறியாளர்கள்...
இந்த பயணத்தின் மூலம், பூமியிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள தாழ்வட்டப் பாதைக்கு பல்வேறு நிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் கொண்டு செல்லப்படவுள்ளன. விண்வெளியில் இந்தியாவின் எதிர்காலத்தை வெளிச்சம் போட்டு காட்டப்போகும் இந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், கடந்த 2018ஆம் ஆண்டு இஸ்ரோவின் முன்னாள் பொறியாளர்களான பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பரத் தாகா ஆகியோரால் தொடங்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனம்.

சிறிய ரக செயற்கைகோள்
இந்த விக்ரம்-1 நான்கு நிலைகளைக் கொண்ட ஒரு ராக்கெட். இதன் முதல் மூன்று நிலைகளில் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மிக முக்கியப் பகுதியான மேல் நிலையில் , செயற்கைக்கோள்களை துல்லியமான சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தக்கூடிய, மீண்டும் இயக்கத்தக்க திரவ எரிபொருள் எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. உலகளவில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வரும் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவு சந்தையைக் குறிவைத்தே இந்த விக்ரம்-1 முதன்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் முன்னணி நாடாக...
இந்த 'ஆகமன்' திட்டம் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், இந்தியாவின் வளர்ந்து வரும் தனியார் விண்வெளித் துறையில் இது நிச்சயம் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும். அதோடு உலகளாவிய வணிக ரீதியான விண்வெளிச் சந்தையில், இந்தியா ஒரு முன்னணி நாடாக உருவெடுக்க இந்த விக்ரம்-1 ராக்கெட் பெரும் பலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.