Also Watch
Read this
சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு, லத்தி என எப்போதும் இறுக்கமான முகத்தோடு நாம் பார்க்கும் காவல்துறைக்கு பின்னால், ஈரமுள்ள ஒரு இதயமும் இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியிருக்கிறது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்.

விருந்தினரே கடவுள்...
வழக்கமாக போலீஸாரைக் கண்டால் சற்றுத் தள்ளி நிற்கும் மக்கள் மத்தியில், 'விருந்தினரே கடவுள்' என்ற இந்தியாவின் உன்னத பண்பாட்டிற்குத் தன் கனிவான செயலால் மகுடம் சூட்டியுள்ளார் ஒரு பெண் காவலர்.

உலக அதிசயம் தாஜ்மஹாலைக் காண்பதற்காக அர்ஜென்டினாவிலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று வந்திருந்தது. அவர்களில் ஒரு பெண்மணி, இந்தியப் பண்பாட்டின் மீது கொண்ட ஆசையால் அழகிய சேலையை உடுத்தியிருந்தார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது சேலை நழுவத் தொடங்கவே, மொழி புரியாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல் அந்தப் பெண்மணி நடுவழியில் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.

பொறுமையாக, நேர்த்தியாக...
அப்போது, அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரப்பிரதேச விரைவு அதிரடிப் படை பெண் காவலர் குடிதேவி, தயங்காமல் ஓடி வந்து, அந்த வெளிநாட்டுப் பெண்ணிற்கு மிகவும் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் சேலையைச் சரிசெய்து உடுத்திவிட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோ
இந்த எளிய பேரன்பால் நெகிழ்ந்துபோன அந்த வெளிநாட்டுப் பெண்மணி, முகம் நிறைந்த புன்னகையோடு 'தேங்க்ஸ் உபி போலீஸ்' என்று கூறி, நன்றியோடு காவலருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்தியாவின் விருந்தோம்பல் பண்பாட்டை உலகளவில் உயர்த்திக் காட்டியுள்ள இந்த உன்னதமான வீடியோ, தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved