Also Watch
Read this
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்குவதை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற அமர்வில், நாதக நிர்வாகி முறையீடு செய்து உள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான தீரன் திருமுருகன், இன்று ஜூலை 8ஆம் தேதி, மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு முன்பாக ஆஜரானார்.

நீதிபதிகளிடம் தீரன் திருமுருகன் கூறியதாவது;
கரூர் மாவட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதோடு, சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. அதை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தீரன் திருமுருகன் கோரினார்.

நீதிபதிகள் மறுப்பு
இதற்கு நீதிபதிகள், "உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்திலேயே இந்த கோரிக்கையை முன் வைக்கலாமே? மனுவாக தாக்கல் செய்தால், வழக்கம் போல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்," என்று கூறியதோடு, முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த வழக்கு முறைப்படி பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.