Also Watch
Read this
பெரும் போராட்டத்திற்குப் பிறகு, இனி தன் மகனின் எதிர்காலத்திற்கு பொறுப்புடன் துணை நிற்பேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அவரது அறிவிப்பை தொடர்ந்து கண் கலங்கி பதிவு போட்டிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா. இருவரின் பதிவுகளும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம்
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக போலீஸில் புகார் கொடுத்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தார்.

ஏற்கெனவே ரங்கராஜ் திருமணம் முடிந்த நிலையில், தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்களை பதிவிட்டு வந்த கிரிஸில்டா, குழந்தையையும் பெற்றெடுத்து அதன் தந்தை மாதம்பட்டி தான் என நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.

நீதிமன்ற வழக்கு
துவக்கத்தில் ஜாய் கிரிஸில்டா குற்றச்சாட்டை மறுத்தே வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து, நீதிமன்றம் சென்ற இந்த விவகாரத்தில், டி.என்.ஏ. பரிசோதனையில் குழந்தைக்கு தான் தான் தந்தை என்று தெரியவந்ததால் குழந்தையை வாழ்நாள் முழுவதும் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்ட ரங்கராஜ், தனது மகனுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடன் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, இனி தனது வாழ்நாள் முழுவதும் மகனின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழு பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு தாயின் மனம்...
இந்த விவகாரத்தில், கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்த போட்டோக்களை வெளியிட்டு, தனக்கு நீதி வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்த ஜாய் கிரிஸில்டா சமூகவலைதளத்திலும் பேசுபொருளாகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில்தான், ரங்கராஜின் அறிவிப்பை அடுத்து, மகனை ஏந்தி முத்தமிடும் படத்தை பகிர்ந்து ஒரு தாயின் மனம் அமைதியுற்றதாக நெகிழ்ச்சி பதிவிட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் அன்பு...
தந்தையும், மகனும் என்று குறிப்பிட்டவர், சில போராட்டங்கள் வெற்றிக்காக அல்ல, ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்காகவே நடத்தப்படுகின்றன. உண்மை எப்போதுமே தன் இடத்தைத் தானே கண்டுகொள்ளும் என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

இருவரின் அடுத்தடுத்த பதிவுகளைத் தொடர்ந்து புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒரு வழியாக பிரச்னை முடிவுக்கு வந்ததே என்று நெட்டிசன்கள் பலரும் அன்பை பகிர்ந்து வருகின்றனர்.