Also Watch
Read this

லஞ்சம், மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவதாக நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து...
இதுதொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி, இளம்பெண்ணை, தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளிவந்துள்ள தகவல், மனதை பதை பதைக்க செய்கிறது. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர், தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பைச் சூறையாடி வருகின்றனர்.
தமிழக மக்களைக் காக்க வேண்டும்
இந்த லட்சணத்தில், முதல்வர் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும் அப்போது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும்.
மேலும், சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்டதால், தாக்கப்பட்டு, கஞ்சா கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞரைப் பெற்றெடுத்த தாயின் கதறலைக் கேட்டீர்களா? தங்களது "தூய" சக்தி அரசின் தூக்கத்தால், சமூகப் பொறுப்புள்ள ஒரு இளைஞரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு தங்கள் பதில் என்ன? மாற்று சக்தி என எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்வீர்களே, இப்படி கஞ்சா கும்பலின் அட்டூழியங்களை தொடரவிட்டு, அப்பாவி உயிர்களைப் பறிப்பது தான் மாற்றமா? தங்களது அரசு ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வரை இன்னும் எத்தனை எத்தனை உயிர்களைத் தமிழகம் பறி கொடுக்க வேண்டியிருக்கும்? பதிலளியுங்கள். உங்கள் பதிலுக்காகத் தமிழகமே காத்திருக்கிறது.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பதிவிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved