Also Watch
Read this
By: Manigandan Raja

180 பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை :
தெலங்கானா மாநிலத்தில் 180 பள்ளி மாணவர்களுக்கு ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா தம்பதி கல்வி ஊக்கத்தொகையை வழங்கி ஊக்கப்படுத்தினர். மாணவர்களின் கல்வி ஆதரவளிக்கும் வகையில் அற்புதமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ள இருவரும், தேவரகொண்டா பவுண்டேஷனை தொடங்கினர்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஊரான தும்மன்பேட் கிராமத்தில் தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 9 மற்றும் 10ஆகிய வகுப்புகளில் நல்ல மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினர்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு ஹீரோ :

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஹரி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளியான விஷால் நடித்த "ரத்னம்" திரைப்படம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து, நடிகர் பிரசாந்த்தை வைத்து அடுத்த படத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார்.
இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென அந்த படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர், அதே கதையை அதர்வாவை வைத்து எடுக்க திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரவி தேஜாவை வைத்து இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் பவிஷ் நாராயணன் நடித்துள்ள "லவ் ஓ லவ்" படம் :

நடிகர் பவிஷ் நாராயணன் நடித்துள்ள "லவ் ஓ லவ்" திரைப்படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு இயக்குநர்கள் வெங்கட்பிரபு மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார் மற்றும் வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ஆர்யா நடித்துள்ள "அனந்தன் காடு" திரைப்படம் :

நடிகர் ஆர்யா நடித்துள்ள "அனந்தன் காடு" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இந்த படத்தை ஜியென் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். முரளி கோபி கதை எழுத, அக்னிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்த படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் யோகி பாபு நடித்துள்ள "கெணத்த காணோம்" திரைப்படம் :
நடிகர் யோகி பாபு நடித்துள்ள "கெணத்த காணோம்" திரைப்படம் நாளை ((16-ம் தேதி)) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஆர்.பி. டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.
படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 13-ம் தேதி வெளியானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved