Also Watch
Read this
திமுக ஆட்சியின் போது, பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் பணம் புகுந்து விளையாடியதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த விவகாரத்தில் மீண்டும் பெட்ரோலை ஊற்றும் வகையில், திமுகவை சேர்ந்த ஒரு பிரமுகரே கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பதாக கூறப்படும் புகார் பகீரை கிளப்பியுள்ளது. கட்டட அனுமதி, அங்கீகாரத்துக்காக நடையாய் நடக்க விட்டதால், பல்வேறு பள்ளி நிறுவனங்கள் குறுக்கு வழியை பயன்படுத்தி சான்றிதழ்களை வாங்க முற்பட்டதே இந்த பெரும் கையாடலுக்கான மூல காரணம் என சொல்லப்படுகிறது.

ரூ.400 கோடி லஞ்சம்
திமுக ஆட்சியின் போது, பள்ளிக்கல்வித்துறையில் ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், திமுகவின் ஒரு பிரமுகரே 100 கோடி ரூபாய் வரை கைகூசாமல் கையூட்டு வாங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தலையை கிறுகிறுக்க வைக்கிறது. பல்வேறு பள்ளி நிறுவனங்களை அசால்ட்டாக ஏமாற்றி மோசடி வலையில் சிக்க வைத்ததாக கூறப்படும் அரசன் தான் இவர்.

ரூ.100 கோடியும் மோசடியும்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் அண்மையில் அளித்த பரபரப்பு புகாரில், திமுக நிர்வாகி பி.டி.அரசகுமார் என்பவர் கட்டட அனுமதி மற்றும் தகுதி உயர்வு சான்றிதழ்களை பெற்று தருவதாக கூறி, பல்வேறு பள்ளி நிறுவன உரிமையாளர்களை நம்ப வைத்து கோடிக்கணக்கிலான பணத்தை வாரி சுருட்டிக் கொண்டதாக பகீரை கிளப்பினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இந்த பி.டி.அரசகுமார் ஆரம்பக் காலத்தில் தொடங்கிய நர்சரி பள்ளியே அவரது 100 கோடி ரூபாய் கையாடலுக்கான அடித்தளம் என சொல்லப்படுகிறது.

அரசியல் செல்வாக்கால்...
நர்சரி பள்ளி உரிமையாளரான பி.டி.அரசகுமார், அங்கீகரிக்கப்படாத தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் அமைப்பை தொடங்கி அதன் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த 1990 முதல் 2000ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக திமுகவில் பயணித்த பி.டி.அரசகுமார், பாஜகவுக்கு சென்றுவிட்டு பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் தாய் கழகமான திமுகவில் ஐக்கியமானார். இப்படியாக நர்சரி பள்ளி உரிமையாளர் முதல் படிப்படியாக உயர்ந்த பி.டி.அரசகுமார், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏமாற்றி ஊரை அடித்து உலையில் போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

ஆட்சி போனதால்...
திமுக ஆட்சியின் பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளிகள் எதிர்கொண்ட அங்கீகாரம் மற்றும் டிடிசிபி அனுமதி தொடர்பான சிக்கல்களை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கி கொண்டு கல்வி தந்தையை போல் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அனுமதி இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என நாட்களை அல்ல, ஆண்டுகளை கடத்திய பி.டி.அரசகுமார், திமுக ஆட்சியில் அமராததால் பணம் கொடுத்த கல்வி நிறுவன உரிமையாளர்களை அம்போ என கைவிட்டதாக சொல்லப்படுகிறது.

கைது, குண்டர் சட்டம்
அரசகுமார், கடந்த 2002ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்க அரசிடம், தடையில்லா சான்று வாங்கித் தருவதாக கூறி அவர் 14 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் கடந்த 2013ஆம் ஆண்டு புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், நிலம் வாங்குவதிலும் ஏற்பட்ட பிரச்சனைக்காக அவர் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

பற்றி எரியும் குற்றச்சாட்டு
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பி.டி.அரசகுமாரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சி பள்ளிக் கல்வித் துறையில் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரையிலும் லஞ்சம் புரண்டு விளையாடியதாக தனியார் பள்ளிகள் அசோசியேஷன் பொதுச் செயலாளர் நந்தகுமார் ஏற்கனவே பகிரங்கமான குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். அதிலும் ஊழலுக்கென தனி அறையை வைத்தும், குளோபல் 360 என்ற நிறுவனத்தை தொடங்கியும் ஓபனாகவே கையூட்டை பெற்று வந்ததாக பகீரை கிளப்பியிருந்த விவகாரமே தணியாத பட்சத்தில், அவ்விவகாரத்தை தலைதூக்கும் வகையில் இந்த திமுக பிரமுகர் பி.டிஅரசகுமார் ஊழல் குற்றச்சாட்டு பற்றி எரிகிறது.