news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உதவிப்பேராசிரியர் தேர்வில் முறைகேடு? ரத்து செய்யுமா தவெக அரசு?
tv

Also Watch

tv

Read this

உதவிப்பேராசிரியர் தேர்வில் முறைகேடு? ரத்து செய்யுமா தவெக அரசு?

கோச்சிங் செண்டர்களுடன் Tie-Up?

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வு, தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தேர்வு முடிவுகளில் மதிப்பெண் முரண்பாடு, விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில் குளறுபடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தவெக அரசு தேர்வை முழுமையாக ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

2,708 உதவி பேராசிரியர் பணியிடம்
எப்படியாவது உதவிப் பேராசியர் ஆகிவிடலாம் என்ற கனவில் இத்தனை ஆண்டுகளாக படித்து படித்து ஓய்ந்து போன பலரும் ஒருவழியாக தேர்வை எழுதிவிட்டு வந்த நிலையில், அவர்களின் எண்ணத்தில் மண்ணள்ளி போட்டிருக்கிறது தேர்வு முடிவுகள்.

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2 ஆயிரத்து 708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 42 ஆயிரத்து 64 பேர் இந்த தேர்வை எழுதியிருந்த நிலையில், 5 பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டன. மீதமுள்ள பாடங்களுக்கான முடிவுகள் சமீபத்தில், வெளியிடப்பட்டிருந்தன. அந்த முடிவுகளை பார்த்த தேர்வர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்த முடிவுகளில் பெரும்பாலும் முறைகேடுகளும் குளறுபடிகளும் நடந்திருப்பதை அவர்களால் அறிய முடிந்தது.

தரவரிசையை தீர்மானிக்குமா?
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்த தேர்வு மொத்தம் இரு தாள்களையும், 3 பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும். முதல் தாளில் A, B என இரு பகுதிகள் உள்ளன. அதில், முதல் பகுதி தேர்வர்களின் தமிழ்மொழிப் புலமையை அறிவதற்கானது. மொத்தம் 50 மதிப்பெண்கள் கொண்ட அதில் 40 சதவீத மதிப்பெண் அதாவது 20 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும். ஆனால், இந்த மதிப்பெண்கள் தேர்வர்களின் தரவரிசையை தீர்மானிப்பதற்கு கணக்கில் கொள்ளப்படாது.

விருப்ப பாடத்தில் இருந்து...
அடுத்ததாக, B பகுதியில் தேர்வர்களின் விருப்பப் பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் என்ற கணக்கில் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதுதவிர இரண்டாவது தாளில் 5 தலைப்பு கொடுக்கப்பட்டு, அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து தேர்வர்கள் கட்டுரையாக எழுதவேண்டும். அந்த கட்டுரைக்கு மட்டும் 50 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இத்தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டு பிரிவினர் 35 சதவீத மதிப்பெண்களும் பெற்றால் போதுமானது.

மதிப்பெண் பூஜ்ஜியம்...
முதல் தாள் B பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள், விளக்கக் கட்டுரைப் பிரிவு தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். குறிப்பாக, 42 தேர்வர்கள் 0 மதிப்பெண்ணும் மற்றும் 106 தேர்வர்கள் ஒரு மதிப்பெண்ணும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, B பிரிவில் 111 மதிப்பெண் பெற்ற தமிழ் பிரிவைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு, கட்டுரைத் தாளில் பூஜ்ஜிய மதிப்பெண் வழங்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு நேர்மாறாக, B பிரிவில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற தேர்வர்களுக்கு, விளக்கக் கட்டுரை மதிப்பீட்டில், 50க்கு 49 வரை அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும், இது அவர்களின் இறுதித் தரவரிசையை மாற்றியமைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முனைவர் பட்டம் பெற்றவருக்கு பூஜ்ஜியம்...
புறநிலை வினாத்தாள் எனப்படும் B பிரிவில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒரு தேர்வர், விளக்கமுறை விளாத்தாளில் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற முடியும்? அல்லது இதற்கு நேர்மாறாக எப்படி நடக்க முடியும்? மதிப்பெண் சீரற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன என்பதை இது பிரதிபலிக்கிறது. தலைப்புக்கு பொருத்தமான ஓரிரு தகவல்களை எழுதினால் கூட குறைந்தது 5 அல்லது 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் எனும் போது முனைவர் பட்டம் வென்ற ஒருவர், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு எதுவுமே தெரியாதவராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.

திட்டமிட்ட முறைகேடு என புகார்
படித்த இளைஞர்களின் எதிர்காலத்துடன் TRB விளையாடுவதாக தேர்வு எழுதியவர்களும், தமிழ் நாடு அரசு கலைக் கல்லூரி சிறப்பு விரிவுரையாளர் சங்க நிர்வாகிகளும் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் தாளில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் ஆசிரியர் தேர்வாணையம் இவ்வாறு செய்திருக்கலாம் என குற்றம் சாட்டப்படுகிறது. இது ஏதோ எதேச்சையாக நடந்த குளறுபடி போல் தெரியவில்லை என்றும் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடாகவே தோன்றுகிறது என தேர்வர்கள் புகார் கூறுகின்றனர்.

வினாத்தாள் கசிவு என புகார்
இதுமட்டுமின்றி, கோச்சிங் செண்டர்கள் மூலம் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிய விடப்பட்டதாக வெளியாகியிருக்கும் புகாரும் பகீர் கிளப்புகிறது. அதாவது, ஈரோடு, திருவண்ணாமலை போன்ற ஒரு சில மாவட்டங்களில் இயங்கும் தனியார் பயிற்சி மையங்களை சேர்ந்தவர்கள் தான், தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டதாகவும், அவர்கள் மூலமாகவே வினாத்தாள் கசிய விடப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்ட நடவடிக்கை வேண்டும்
வினாத்தாள் கசிவு, தேர்வு நடத்துவதில் குளறுபடி, தேர்வு முடிவுகளில் மோசடி என அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கனவோடு விளையாடியிருக்கும் இந்த தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு, நியாயமான முறையில் தேர்வு நடத்த வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பிடித்து சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Link
திமுக பிரமுகரின் ரூ.100 கோடி ஊழல்? மோசடி வலையில் பள்ளி நிறுவனங்கள்?

திமுக பிரமுகரின் ரூ.100 கோடி ஊழல்? மோசடி வலையில் பள்ளி நிறுவனங்கள்?

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கனமழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

0
0 min agoshare
கொடைக்கானல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau