Also Watch
Read this
மதுரையில் ரூம் போட்டு கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் போலீசாரிடம் சிக்கிய நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புக்காக ஏர்-கன் துப்பாக்கியுடன் வலம் வந்த கும்பல் சிக்கியது எப்படி? இதன் பின்னணியில் உள்ளது யார்?

தீவிர சோதனையில்...
தமிழ்நாட்டில், போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், அதனை விற்பனை செய்யும் நபர்கள் அரிவாளுடன் சுற்றித்திரிந்த காலம் போய் தற்போது ஏர்-கன் துப்பாக்கியுடன் விற்பனை செய்யும் கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில், கல்லூரி மாணவர்களை குறிவைத்து, வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்த சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி.தேவநாதன் உத்தரவின் பேரில் சிறப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

ரூம் எடுத்து தங்கி...
அப்போது, சந்தேகத்தின் பேரில், மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்த சிபியோன் ராஜ் என்பவரை பிடித்து விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல் வெளியாகி போலீசாரையே அதிர வைத்தது. போதை மாத்திரையை விற்பனை செய்ய சிபியோன் ராஜ் காளவாசல் பகுதியில் ரூம் எடுத்து தங்கி நண்பர்களுடன் சேர்ந்து இதனை செய்து வந்தது அம்பலமானது.

ரூ.8,000க்கு விற்பனை
கல்லூரியில் உடன் படித்த நண்பர்களான செக்கானூரணி பகுதியை சேர்ந்த லோகபாண்டி, நந்தகுமார், தென்னவன், சுபாஷ், விஷால் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டு வந்ததை ஒப்பு கொண்டுள்ளார். மேலும், வலி நிவாரண மாத்திரைகளை 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதனை 8 ஆயிரம் ரூபாய்க்கு போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்
குறிப்பாக, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கடந்த 3 மாதங்களாக இந்த கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ள நிலையில், பாதுகாப்புக்காக ஆன்-லைன் மூலம் வாங்கிய ஏர்-கன் துப்பாக்கியை பயன்படுத்தி வந்தது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஒழிக்க அரசு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நேரத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்-லைன் மூலம் வாங்கப்படும் ஏர்-கன் துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கண்காணிக்க வேண்டும்
இதனிடையே, சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிபியோன் ராஜ், லோகபாண்டி, நந்தகுமார், தென்னவன், சுபாஷ் மற்றும் விஷால் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த செக்கானூரணி போலீசார் அவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 680 வலி நிவாரண மாத்திரைகள், ஏர் கன் துப்பாக்கி, 6 அரிவாள், கார், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். வலி நிவாரண மாத்திரைகளை எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர் என்பதையும் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.