Also Watch
Read this
By: Web Team

CM Vijay: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய், அவருடன் சேர்ந்து அமைச்சர்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.
சர்வதேச போதை எதிர்ப்பு நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. ’ஸ்டார்ட் ரன்.. ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற பெயரில் நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ராமன், தலைமை செயலாளர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

ஓட்டம் தொடங்குவதற்கு முன்பாக அனைவரிடமும் சேர்ந்து முதலமைச்சர் விஜய் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதில், “போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தையும், நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுறுத்துவேன். போதை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுக்க அரசுக்கு துணை நிற்பேன், மக்களின் நல்வாழ்வுக்கு நான் பங்கேற்பேன் என்று உளமாற உறுதிக் கூறுகிறேன்” என முதல்வர் உறுதிமொழி ஏற்க அவருடன் சேர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
பின்னர் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்ததுடன், அனைவரிடமும் சேர்ந்து தானும் ஓடி போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று ஆர்வமுடன் ஓடினர்.