Also Watch
Read this
நடந்து முடிந்த தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளதாகவும், காங்கிரஸின் இந்த செயல் விரும்பத்தக்கது அல்ல எனவும் இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்பார்க்காத ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கூட்டத்திலேயே அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படும் நிலையில் இந்தியா கூட்டணியில் திமுக மீண்டும் இடம்பெற வேண்டும் என விரும்புவதாகவே திருமாவின் பேச்சு அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் vs திமுக
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலேயே திமுக உடன் காங்கிரஸ் ஒன்று சேரமாட்டார்கள், தவெக பக்கம்தான் தாவுவார்கள் என பலரும் எதிர்பார்த்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் நடந்த தொகுதி பங்கீடு, பிரச்சாரத்தில் பெரிதாக ஈடுபாடு காட்டாத ராகுல், திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோதே தவெகவினரை சந்தித்தது என காங்கிரஸ் கொடுத்த சஸ்பென்ஸ் அரசியலில் கொஞ்சநஞ்சமல்ல. அத்தனையையும் மீறி கடைசி நேரத்தில் திமுகவுடன்தான் களம்கண்டது காங்கிரஸ். யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடிக்க ஏற்கெனவே திமுக மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக ஓடிவந்து ஆர்வமாக ஆதரவு கொடுத்தது.

59 ஆண்டுகளுக்குப் பிறகு...
திமுக உடனான 22 ஆண்டுகால பந்தத்தை முறித்து தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் 59 ஆண்டுகளுக்குப்பின் அமைச்சரவையில் இடம்பிடிக்கும் வாய்ப்பை பெற்றது காங்கிரஸ். பதவிக்காக தான் பந்தத்தை முறித்துக் கொண்டதாக ஒருசாரார் கூறிய நிலையில் மற்றொரு சாரார் திமுகவும் அதிமுகவும் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதுதான் காங்கிரஸின் தாவலுக்கே காரணம் எனக்கூறி வந்தனர். இதனிடையே ”துரோகி காங்கிரஸ்” என திமுகவினர் காங்கிரசாரை வசைபாடியதையும், பதிலுக்கு காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் திமுகவினருக்கு பதிலடி கொடுத்ததையும் சமூகவலைதளங்கள் மற்றும் நேரிலும் பார்க்க முடிந்தது.

இந்தியா கூட்டணி ஆலோசனை
இந்நிலையில், டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை புறக்கணித்த திமுக, இனி இந்தியா கூட்டணியில் திமுக இல்லை எனவும் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன், நடந்து முடிந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எதிர்க்கட்சி கூட்டணிகளில் வலிமையாக இருந்த திரிணாமூல், இடதுசாரிகள், திமுகவின் வெற்றியை பாதித்துள்ளதாகவும் இதனால் கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

விமர்சித்த திருமாவளவன்
குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது, இது விரும்பத்தக்கது அல்ல எனவும் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து, இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் அதிர்ச்சி
திருமாவின் இந்த பேச்சு ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோரை அதிர்ச்சியடைய வைத்தது. கூட்டத்தில் பேசியது குறித்து வீடியோ வெளியிட்ட திருமா, காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை குறித்த தனது எதிர்ப்புகளை பதிவு செய்தார். திருமாவின் இந்த பேச்சு இந்தியா கூட்டணியில் திமுக மீண்டும் இடம்பெற வேண்டும் என விரும்புவதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். சமூக நீதி மற்றும் பட்டியலின அரசியலின் முகமாக பார்க்கப்படும் திருமாவளவன் தேசிய அளவில் காங்கிரஸின் அணுகுமுறையை விமர்சித்திருப்பது பலரது மத்தியில் பேசுபோருளாகி உள்ளது. அதனால், தங்கள் பக்கம் உள்ள கருத்தையும் காங்கிரஸ் கட்சியினர் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளக்கம் தந்த காங்கிரஸ் எம்பி
அந்தவகையில், திருமாவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் கூறிய கருத்து ஆச்சரியமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பது எப்படி கூட்டணியை பலவீனப்படுத்தும் செயலாகும்? ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் தங்களது அமைப்பையும் வாக்கு வங்கியையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உள்ளது. காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் INDIA கூட்டணி வலுவாக இருக்கும். காங்கிரஸை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் INDIA கூட்டணியை வலுப்படுத்தாது, மாறாக பாஜகவுக்கு மட்டுமே உதவும் எனத் தெரிவித்துள்ளார். எங்களை விமர்சிக்கலாம்; எங்கள் செயல்பாடுகளில் குறைகளை சுட்டிக்காட்டலாம். அந்த விமர்சனங்களை கேட்கும் தைரியமும், அவற்றை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் காங்கிரஸுக்கு உண்டு. அதனால்தான் கூட்டணிக்குள் இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட காங்கிரஸை வெளிப்படையாக விமர்சிக்க முடிகிறது எனக்கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved