Also Watch
Read this
அதிமுகவில் மீண்டும் டி.டி.வி.தினகரனை சேர்க்க வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட அதிமுகவினர் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சை நிர்வாகிகளுடன் ஆலோசனை
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், கும்பகோணம் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி அமைப்பை வலுப்படுத்தல், டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில், ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

நிர்வாகிகள் கோரிக்கை, இபிஎஸ் சிக்னல்
இந்த கூட்டத்தின் போது, மாவட்ட நிர்வாகிகள் சிலர், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் முயற்சியை கட்சி தலைமை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பதில் கூறிய இபிஎஸ், “டி.டி.வி.தினகரன் தற்போது தனியாக ஒரு அரசியல் இயக்கம் நடத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது அவரை எப்படி அழைத்து வந்து அதிமுகவில் சேர்க்க முடியும்?,” என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலத்தில், சசிகலா, தினகரன் மற்றும் ஓபிஎஸ் குறித்து பேசினாலே, கொதித்து எழும் இபிஎஸ், தற்போது, அமைதியாகவே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கட்சியை வலுப்படுத்த...
இதனை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றால், டி.டி.வி.தினகரனை மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கலாம் என்று சில நிர்வாகிகள், இபிஎஸ் முன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved