Also Watch
Read this

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை, இந்திய அணி வீழ்த்தியது. பந்து வீச்சில் எதிரணியைத் திணறடித்து 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வீராங்கனைகள் வெற்றிவாகை சூடினர். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி ஷர்மா, 10 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட்
நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நேற்று ஜூன் 14ஆம் தேதி இரவு 7 மணிக்கு எட்கபாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற குரூப்-ஏ ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷெபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர். ஷெபாலி வர்மா 5 பந்துகளில் 6 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

நின்று ஆடிய ஜோடி
இதனை தொடர்ந்து, ஸ்மிருதி உடன் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானத்துடன் விளையாடி ரன்களை குவித்தது. ஸ்மிருதி மந்தனா பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில் 36 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நின்ற ஸ்மிருதி மந்தனா 44 பந்துகளில் 68 ரன் குவித்து, 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் வெளியேறினார். பாரதி புல்மாலி 1, ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்த்து அவுட் ஆயினர். கடைசியாக தீப்தி சர்மா 12 ரன்களும், ஸ்ரேயங்கா பாட்டீல் ஒரு ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது இந்தியா.

171 ரன்கள் இலக்கு
பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், ஃபாத்திமா சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், டாஸ்மியா ருபாப், ரமீன் ஷமிம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் மகளிர் அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் அந்த அணியால் சரிவில் இருந்து மீண்டு வர முடியவில்லை.

5 விக்கெட் கைப்பற்றிய தீப்தி சர்மா
இந்திய மகளிர் அணி சார்பில், பந்து வீசிய தீப்தி சர்மா 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், இரண்டாவது முறையாக 5+ விக்கெட்டுகளை ஒரே ஆட்டத்தில் தீப்தி கைப்பற்றினார். சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளாக 166ஐ கைப்பற்றிய வீராங்கனையாக தீப்தி சாதனை படைத்தார்.

64 ரன்களில் இந்தியா வெற்றி
இந்த ஆட்டத்தில், ஸ்ரீசரணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சு மூலம் பாகிஸ்தானின் 9 விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்றியது. 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 64 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. டி20 மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றிகளை பதிவு செய்து இந்திய மகளிர் அணி சாதனை படைத்து உள்ளது.

பாகிஸ்தான் கேப்டனுடன் கை குலுக்காத இந்திய கேப்டன் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் மறுத்து விட்டார். கடந்தாண்டு பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களுடன் பரஸ்பர கை குலுக்குவது, போட்டிக்கு பின் இரு அணிகளும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதை இந்திய அணி தவிர்த்து வருகிறது.

அடுத்த ஆட்டம்...
இந்த தொடரின் அடுத்த ஆட்டத்தில் ஜூன் 17ஆம் தேதியன்று நெதர்லாந்து அணி உடன் இந்தியா விளையாடுகிறது. பின்னர் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆஸ்திரேலியா அணி உடன் இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved