Also Watch
Read this
By: Manigandan Raja

ஐபிஎல் தொடரில் இருந்து ஆயுஷ் மாத்ரே விலகல் :
2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரரான ஆயுஷ் மாத்ரே போட்டியில் இருந்து விலகியதாக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்தபோது, இடது தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலியை சந்திக்க ஆசை எனவும் ஜோகோவிச் பேட்டி :

உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்திய ரசிகர்களுடன் தமக்கு ஒரு வலுவான பிணைப்பு இருப்பதாக உணர்வதாகவும், விரைவில் அங்கு சென்று நேரம் செலவிட விரும்புவதாகவும், விராட் கோலியை சந்திக்க விரும்புவதாகவும் நோவக் ஜோகோவிச் கூறியுள்ளார்.
ஒரு இன்னிங்ஸில் இரண்டு முறை 10 சிக்ஸர்கள் :

சன் ரைசர்ஸ் ஐதரபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா ஐபிஎல் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இரண்டு முறை 10 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். நேற்று நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
டெல்லி அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி :

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 242 ரன்களை குவித்தது. 243 ரன்கள் கடின இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் வரை ஆடி 195 ரன்களை சேர்த்தது.
அபிஷேக் சர்மா தலைசிறந்த டி-20 பேட்ஸ்மேன் :

இந்திய டி-20 கிரிக்கெட் அணியில் உள்ள தற்போது உள்ள வீரர்களில் அபிஷேக் சர்மா தான் தலைசிறந்த பேட்ஸ்மேன் என முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் பெருமிதம் தெரிவித்தார். மற்ற வீரர்களிடமிருந்து அபிஷேக் சர்மா தனித்துவமாக தெரிவதாகவும், வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் போல் ஆடுவதாகவும் யுவ்ராஜ் தெரிவித்தார்.
தோனி நல்ல உடற் தகுதியுடன் உள்ளதாக அஸ்வின் பேச்சு :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீனியர் வீரர் தோனி நல்ல உடற் தகுதியுடன் உள்ளதாகவும், நாளை நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் நிச்சயம் ஆடுவார் எனவும் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார். தோனி விக்கெட் கீப்பிங் பணியை செய்வார் என்றும், சாம்சன் பீல்டிங் செய்வார் எனவும் அவர் கூறினார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது :

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து பேசிய டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல், தோல்வி ஏமாற்றம் அளித்ததாகவும், தங்களது வீரர்கள் சிறப்பாக பந்து வீசாத காரணத்தால் 240 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்ததாகவும் கூறினார். இந்த தோல்வி மூலம் நிறைய கற்றுக் கொண்டு அடுத்த போட்டியில் திறம்பட விளையாடுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.