Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை :
போர்நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை மீறினால், ஈரான் இஸ்லாமிய குடியரசு என்ற நாடே இருக்காது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தனது Truth Social பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போர்நிறுத்த விதிமீறலில் ஈடுபட்ட ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, அந்நாட்டின் ஏவுகணை, டிரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலை நீடித்தால், இனிமேலும் நியாயமாக சிந்திக்க முடியாத ஒரு நிலை வரலாம் என்றும், நடப்பாண்டு தொடக்கத்தில் துவங்கப்பட்ட பணியை இராணுவ ரீதியாக முடிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு நடந்தால் ஈரான் என்ற நாடே இருக்காது என எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது தொடர்ந்து 2வது நாளாக அமெரிக்கா தாக்குதல் :
வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஈரானின் இராணுவ நிலைகளை குறிவைத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. கடந்த சனிக்கிழமை அன்று ஹோர்முஸ் நீரிணை வழியாக பனாமா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
உடனடியாக ஈரானின் ஏவுகணை, டிரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் மீது அமெரிக்காவும் பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 2 வாரங்கள் மட்டுமே ஆகும் நிலையில், மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி இருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தின்போது உயிரை இழந்த கால்பந்து வீரரின் மனைவி :

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது மகளை பாதுகாத்து கால்பந்து வீரரின் மனைவி தன் உயிரை இழந்துள்ளார். கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இடர்பாடுகளில் சிக்கி இதுவரை ஆயிரத்து 430 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 69 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அரசுக்கு புகார் வந்துள்ள நிலையில், கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோ, தமது மனைவி ஆண்ட்ரியா உயிரிழந்ததாக இன்ஸ்டாவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். வீடு இடிந்த போது மகள் அலானாவைக் காப்பாற்ற முயன்று அவர் தம் உயிரை இழந்ததாக தெரிவித்துள்ளார்.