news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்?
tv

Also Watch

tv

Read this

நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்த தனிநபர்?

வடமங்கலம் , கிருஷ்ணகிரி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வாடமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு (PWD) சொந்தமான சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரிதான் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டத்திற்கும், விவசாயத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரானது, "நீர் கஜான் குளம்" எனப்படும் முக்கிய கால்வாய் வழியாகச் சென்று, சுற்றியுள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை அளித்து வந்தது. இந்த தண்ணீரை நம்பி நூற்றுக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் நெல், கரும்பு மற்றும் பிற பயிர்களை சாகுபடி செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நீர்வரத்து கால்வாய் செல்லும் பாதையையும், அதனையொட்டிய அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தையும் அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதனால் கால்வாய் சுருங்கி, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது முற்றிலும் தடைபட்டது. தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கண்ட வாடமங்கலம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், கடந்த 3 ஆண்டுகளாக வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்து அரசுத்துறைகளிலும் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தொடர்ந்து பல புகார் மனுக்களை அளித்து வந்தனர்.

மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்த வருவாய்த்துறையினர், சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை உறுதி செய்தனர். அதன்பின், அங்கு எல்லைக் கற்களை
நட்டு, "இது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம்" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பலகையையும் (Board) வைத்தனர்.

ஆனால், சட்டத்தை மதிக்காத அந்த ஆக்கிரமிப்பாளர், அதிகாரிகள் வைத்த போர்டை பிடுங்கி எறிந்துவிட்டு, எல்லைக் கற்களையும் உடைத்து, மீண்டும் அதே இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயிகளுக்கு சவால் விடுத்துள்ளார். இதனால் நிர்வாகத்தின் மீது அதிருப்தியடைந்த கிராம மக்கள், தாங்களாகவே களத்தில் இறங்க முடிவு செய்தனர்.

நீண்ட நாட்களாகியும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளரை அகற்றாததால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வாடமங்கலம் கிராம மக்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஒன்று திரண்டனர். தாங்களே கால்வாயை மீட்கப் போவதாகக் கூறி, ஒரு ஜேசிபி (JCB) தூர்வாரும் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிக்கு அதிரடியாகச் சென்றனர்.

ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி தொடங்க முற்பட்டபோது, ஆக்கிரமிப்பு செய்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓடிவந்து பணிகளைத் தடுத்து நிறுத்தினர். இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் உருவானது.

திடீரென ஆக்கிரமிப்பாளர்கள் தங்களது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து, தங்கள் உடலின் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். மேலும், தூர்வார வந்த ஜேசிபி இயந்திரத்தைக் கட்டியணைத்துக் கொண்டும், அதன் மீது ஏறி நின்றுகொண்டும் பணிகளைத் தொடர விடாமல் மரண மிரட்டல் விடுத்தனர்.

இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, கிராமமே ஸ்தம்பித்தது. இச்சம்பவம் குறித்து காட்டுத்தீயாய் பரவிய தகவலையடுத்து, போச்சம்பள்ளி வட்டாட்சியர் (Tahsildar) மோகன் மற்றும் பாரூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்கொலைக்கு முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கொந்தளிப்பில் இருந்த கிராம மக்களிடமும், விவசாயிகளிடமும் வட்டாட்சியர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். "அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; விரைவில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு கால்வாய் தூர்வாரப்படும்" என வட்டாட்சியர் மற்றும் போலீசார் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

அதிகாரிகளின் உறுதியான பேச்சை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், தற்காலிகமாக தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும், தாங்கள் கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு, ஆக்கிரமிப்பில் இருந்த கால்வாயின் சில பகுதிகளைத் தூர்வாரினர்.

மேலும், மீண்டும் அந்த இடத்தை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காக, மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் நூற்றுக்கணக்கான தென்னங்கன்றுகளை நட்டு தங்களது உரிமையை நிலைநாட்டினர்.
அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சம்பவங்கள் நடந்ததால், வாடமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்னும் பதற்றமான சூழலே நீடித்து வருகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க பாரூர் போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Link
மின்மாற்றியில் ஆயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து

மின்மாற்றியில் ஆயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பின்னணி பாடகி S.ஜானகி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

1
11 mins agoshare
S JANAKI Death








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau