Also Watch
Read this
கோவை அருகே ஒரே பகுதியில் அடுத்தடுத்து இயங்கி வரும் 6 கல்குவாரிகளால் தினம்தினம் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும், தங்களின் பிழைப்பே கேள்விக்குறியாகி விட்டதாகவும் குற்றம் சாட்டி ஒரு விவசாயி, தனி ஒரு ஆளாக 9ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என விவசாயி அழுத்தமாக கூறி உள்ள நிலையில் கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஒரே பகுதியில் 6 கல்குவாரிகள்...
பசுஞ்சோலையாக இருந்த தங்கள் கிராமம் கல்குவாரிகளால் பாலைவனமாக மாறிவிடுமோ என்பதுதான் மக்களின் அச்சம்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நம்பர் 10 முத்தூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நம்பர் 10 முத்தூர் பகுதியில் மட்டும் அடுத்தடுத்து 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

அளவுக்கு அதிகமாக...
அரசுக்கு சொந்தமான இந்த கல்குவாரிகளை தனிநபர்கள் டெண்டரில் எடுத்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட கனிம வளங்களை வெட்டி கடத்துவதாகவும், அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளை பயன்படுத்தி பாறைகளை தகர்ப்பதாகவும் கூறும் விவசாயிகள் அருகே உள்ள விளைநிலங்களுக்குள் பாறைப்பொடிகள் படிந்து அந்த நிலமே எதற்கும் லாயக்கில்லாமல் போய் விட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், வெடி வைக்கும்போது குவாரிகளில் இருந்து கற்கள் தெறித்து வீடுகளுக்குள் விழுவதாகவும் புகார் கூறும் பொதுமக்கள் கடந்த ஆட்சியில் அத்தனை அதிகாரிகளிடமும் புகாருக்கும் மேல் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறுகின்றனர்.

ஆட்சியரிடம் ஆய்வறிக்கை
இதுஒருபுறமிருக்க, கல் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அதிக அளவிலான வெடிமருந்துகள் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் அதனை வெடிக்க வைத்து சோதனையும் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சார்ஆட்சியர் ராமகிருஷ்ணன், ட்ரோன் சர்வே எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு அதுகுறித்த ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆய்வே கண்துடைப்பு தான்...
ஆனால், கல்குவாரிகளில் எந்தவித அத்துமீறலுமே நடைபெறவில்லை எனக்கூறிய கனிம வளத்துறை உதவி இயக்குனர் மெகபூப்கான், விவசாயிகளின் யூகத்திலான குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது என்றார். இதனிடையே, அதிகாரிகளின் ஆய்வே கண்துடைப்புதான், குறைந்த வெடிகளை பயன்படுத்தி பெயருக்கு சோதனை செய்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

என்ன நடவடிக்கை?
அதிகாரிகள் ஒருபக்கம் அத்துமீறலே இல்லையென சொல்ல, அவர்கள் சொல்வதே பொய்தான் என விவசாயிகள் கூற இந்த விவகாரத்தில் முடிவு என்ன என்பது ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ள அறிக்கையும், அந்த அறிக்கைக்கு பிறகு எடுக்கப்போகும் நடவடிக்கையும்தான் தீர்மானிக்கும்.