Also Watch
Read this
அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 68 பேர் உயிரிழந்ததோடு, ஐந்து மாவட்டங்களில் 763 கிராமங்களில் 5.24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தடுக்க வழி இல்லையா?
ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். சுமார் 48,742 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், வெள்ளத்தின் தாக்கத்தைக் காட்டும் காணொலிகளும் இணையத்தில் தொடர்ந்து பரவி, கள நிலவரத்தையும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் நமக்கு காட்டுகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும் ஆனால், அசாமில் ஏன் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது? அதைத் தடுக்க வழியில்லையா?

மலைத் தொடர்களால் சூழப்பட்ட...
உலகின் மிகப்பெரிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. திபெத்தில் யர்லுங் சாங்போ Yarlung Tsangpo என்ற பெயரில் உருவாகும் இந்த நதி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து, பின்னர் திபெத்தின் நாம்சா பார்வா Namcha Barwa அருகே இமயமலையைச் சுற்றி ஒரு 'U' டர்ன் போடுகிறது. பின்னர் அது சியாங் என்ற பெயரில் அருணாச்சல பிரதேசத்திற்குள் நுழைந்து, இறுதியாக அசாமில் நுழையும்போது பிரம்மபுத்திராவாக மாறுகிறது.

இமயமலைப் பகுதி முழுவதும் உள்ள பனி ஆறுகள், கனமழையால் பெருகும் நீரோடைகளால் அசாமை அடையும்போது பிரம்மபுத்திரா பிரம்மாண்ட ஆறாக நுழைகிறது. அசாம் என்பது மூன்று புறமும் மலைப்பகுதிகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கு. வடக்கே இமயமலை, கிழக்கு மற்றும் தென்கிழக்கே பட்காய் Patkai Hills மற்றும் நாகா மலைகள் Naga Hills, தெற்கே மேகாலயா பீடபூமி Meghalaya Plateau என செங்குத்தான மலைத்தொடர்களால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் அசாம் அமைந்துள்ளது.
பொங்கிப் பெருகி...

பின்னல் இட்டது போல்...
இமயமலைத் தொடர்களில் இருந்தும் வரும் வழிநெடுகிலும் பாறைகள், மணலை அடித்துக் கொண்டு வரும் பிரம்மபுத்திரா, அசாமின் சமவெளிகளில் வண்டல் படிவுகளை உருவாக்குகிறது. இதன் விளைவாக ஆற்றின் படுகை படிப்படியாக உயர்ந்து, வெள்ள நீரைக் கொண்டு செல்லும் திறன் குறைகிறது. நதி கொண்டுவந்து சேர்த்த வண்டல் படிவு அதன் போக்கிற்கு இடையூறாக மாறும்போது பாதையை சற்றே மாற்றி மாற்றி பின்னல் இட்டது போல செல்ல நேரிடுகிறது. ஆற்றின் பின்னல் போக்கில் உருவாகும் கரைகளைப் பராமரிப்பது கடினம் என்பதோடு, அதிக நீர்வரத்தின் போது கரைகள் உடைவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

நீர்ப்பெருக்கின் பிரம்மாண்டம்
திபெத், அருணாச்சல பிரதேசம், பூட்டான் மற்றும் வடகிழக்கு இந்தியா ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் பெய்யும் கனமழையால், பெருமளவிலான நீர் கீழ்நோக்கிப் பாய்கிறது. பல துணை ஆறுகளிலிருந்து உருவாகும் இந்த வெள்ளப்பெருக்கு ஒன்றாக இணையும்போது,

பிரம்மபுத்திரா நதியானது பள்ளத்தாக்கின் பரந்த பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமயமலைப் பகுதி முழுவதும் மழை நிகழ்வுகளின் தீவிரத்தை காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தீவிர பருவமழையோடு திடீர் மேகவெடிப்புகள், பனிப்பாறை உருகுதல் சேரும்போது நீர்ப்பெருக்கின் பிரம்மாண்டம் நிலம் கொள்ளாததாகி விடுகிறது.

வெள்ள பாதிப்புகளை தணிக்க...
வேகமான நகரமயமாக்கல், சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காடுகள் அழிக்கப்படுவது இயற்கையான வெள்ளச் சமவெளிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளும், வெள்ள பாதிப்பை அதிகரிக்கின்றன.

அசாமின் புவியியல் அமைப்பு காரணமாக வெள்ளப்பெருக்கை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேசமயம், சிறந்த வெள்ள முன்னறிவிப்பு, சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல், கரைகளை வலுப்படுத்துதல், வடிகால் அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வெள்ளச் சமவெளிகளில் கட்டுமானங்களை தவிர்த்தல் போன்றவை வெள்ளப் பாதிப்புகளை தணிக்க உதவும்.

வெள்ளப்பெருக்கால்...
வெள்ளப் பெருக்கால் அசாமுக்கு பெரும் நன்மைகளும் உண்டு. விவசாயம் மற்றும் மீன் வளத்திற்கு ஆதாரமான நீர் மற்றும் நில வளம் மேலும் வளமடைவதோடு, இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்களும் பேணப்படுகின்றன.