Also Watch
Read this
By: Web Team

பெரம்பலூரில், களைக்கொல்லி அடித்ததால், 25 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் கிராமத்தைச் சேர்ந்த 7 விவசாயிகள், தங்கள் வயலில் பயிர் செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்காக, நெற்குணம் கிராமத்தில் ஜி.ஆர்.அக்ரோ சென்டர் நடத்தி வரும் ரெங்கநாதன் என்பவரிடம் களைக்கொல்லி மருந்து வாங்கி உள்ளனர்.
தங்களது மக்காச்சோளம் பயிரிட்ட வயல்களில், களைக்கொல்லி மருந்தை அடித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 19, 20ஆம் தேதிகளில் வயலில், களைகளுடன் மக்காச்சோள பயிர்களும் சேர்ந்து வாடி
கருகி உள்ளது.

தகவல் அறிந்த வேளாண்துறை அதிகாரிகள், மக்காச்சோளம் பாதிக்கப்பட்ட வயலுக்குச் சென்று பார்வையிட்டு அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வறிக்கை வந்த பின்னர் பூச்சி மருந்தின் தரம் குறித்து தெரிவிக்கப்படும் என கூறி உள்ளனர். இந்நிலையில், செய்வதறியாமல் தவித்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

தங்கள் முழு உழைப்பும், வீணாகிய நிலையில், மருந்து நிறுவனங்களும் கண்டு கொள்ளாததால் விரக்தியில் இருந்த விவசாயிகள், தங்கள் வயல்களை மீண்டும் பயிர் செய்வதற்காக, டிராக்டர் மூலம், கருகிய மக்காச்சோள பயிர்களை அழித்து உழவு செய்தனர். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகவும், இதற்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved