Also Watch
Read this
தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தேகம் எழுப்பி உள்ளார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பது அதிமுக தான் என்றும் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.

"முதலமைச்சர் விஜய்தான் களவாணி"
அதிமுக சின்னத்தில் வென்ற எம்எல்ஏக்களை திருடும் முதலமைச்சர் விஜய் தான் களவாணி என்று, ’திமுக - அதிமுக கூட்டுக் களவாணிகள்,’ என்ற முதலமைச்சர் விஜய் விமர்சனத்திற்கு இபிஎஸ் பதிலடி தந்துள்ளார்.

இரவல் ஆட்சி - இபிஎஸ் விமர்சனம்
தமிழ்நாட்டில் இரவல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து உள்ளார். முதலமைச்சர் விஜய் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால் என கடுமையாக தாக்கியுள்ளார்.
அதிமுக-திமுக கூட்டணி அமைக்கும் என்பது கட்டுக்கதை என இபிஎஸ் விளக்கம் அளித்ததுடன், தீயசக்தி திமுக என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

உண்மையில் களவாணி...
சேலம் ஓமலூரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா? என்பதே பெரும் சந்தேகமாக இருக்கிறது ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் இயக்கம் தான் அதிமுக.

எங்கு எப்போது பேசினாலும் முதல்வர் விஜய் வார்த்தைகளை யோசித்து பயன்படுத்த வேண்டும். கரூரில் பேசிய முதல்வர் திமுக - அதிமுகவை கூட்டு களவாணிகள் என்றார். ஆனால், எங்களின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை திருடி, தனது கட்சியில் இணைத்து கொள்ளும் முதல்வர் விஜய் தான் உண்மையில் களவாணி. நாலாந்தர பேச்சாளரின் பேச்சு போலத் தான் கரூரில் விஜய் பேசியது, இருந்தது.

இரட்டை வேடம் போடுகிறாரா?
தேர்தலுக்கு முன் இரண்டு திராவிட கட்சிகள் சரியில்லை, ஆதலால் மாற்று சக்தி நான் என்று முழங்கிய முதல்வர் விஜய் அதில் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சியையே பிடித்து உள்ளார். அப்படி என்றால் விஜய் இரட்டை வேடம் போடுகிறாரா? 60 நாட்கள் ஆட்சியில் தவெக ஒன்றுமே செய்யவில்லை, ஆக்கப்பூர்வ வேலை எதுவும் செய்யாமல், வெறும் பஞ்ச் டயலாக் தான் பேசி வருகிறார்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு...
சிங்கப்பெண் படை என்பதெல்லாம் ஒரு ஷோ தான். மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கி தான் தனது ஆட்சியை விஜய் நடத்தி கொண்டிருக்கிறார். 4 கால்கள் இருந்தால் தான் நாற்காலி நிற்கும், விஜய்யின் முதல்வர் நாற்காலியில் ஒரு கால் இரவல் கால்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் காங்கிரஸ் கட்சியின் நிலைமை, நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் தான் உள்ளது, திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெகவு-க்கு சென்று பதவி வாங்கியது தான் காங்கிரஸின் கொள்கையா?
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.